தமிழின அழிப்பின் நினைவு நாளை ஒன்றுபட்டு முன்னெடுக்க பிரான்சில் தமிழர் அமைப்புக்கள் உறுதி!

Report Print Dias Dias in சமூகம்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ஆவது ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் மே 18ஆம் திகதி இடம்பெற உள்ளது.

இந்நினைவு நாளை தமிழர் அமைப்புக்கள் யாவும் ஒன்றுபட்டு முன்னெடுப்பதாக தீர்மானித்துள்ளதுடன் இதற்கான ஏற்பாட்டுக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், பரிசில் கடந்த 07ஆம் திகதி பிரான்ஸ், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இது தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இச்சந்திப்பில் 10ஆவது ஆண்டு நிறைவை எழுச்சியுடன் நடத்தவும், தாயகத்தில் நடைபெறும் தொடர் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் எமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்ற கருத்து அனைவராலும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

10ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு பிரான்ஸ் தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் தமிழினப் படுகொலையை ஒரே குரலில் உரத்துக் கூறல் வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் உபகட்டமைப்புகளுடன் இணைந்து தமிழர் நலன்புரி அமைப்பு பிரதிநிதிகள் 11 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும், இச்சந்திப்பு எதிர்காலத்தில் தாயகம் நோக்கிய ஆரோக்கியமான செயற்பாடுகளுக்கு வழிசமைக்கும் எனவும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரதிநிதிகள், உப கட்டமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத் தமிழர் திரைப்பட சங்கம், வர்த்கக சங்க பிரதிநிதிகள், கலைஞர்கள், சமூக அரசியல் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் தமிழர் நலன்புரி அமைப்புகள், அரசியல் அமைப்புகள், கலைஞர்கள், ஈழத்திரைப்படச் சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர் ஊடகங்கள் உட்பட 50இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.