ஜனாதிபதியின் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பாடசாலையொன்றுக்கு 50 தென்னை மரங்கள்

Report Print Navoj in சமூகம்

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நாசிவன்தீவு கிராமத்தில் மரம் நடுகை, வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல், வாவிக்கரை துப்பரவு செய்தல் போன்ற வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாட்டிற்காக ஒன்றிணைவோம் என்ற செயற்றிட்டத்தின் கீழ் இன்று இந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வீ.வாசுதேவனின் வழிகாட்டலில், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா தலைமையில் இதன்போது வேலைத்திட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இதில் ஜனாதிபதி செயலகத்தின் உதவி செயலாளர் எச்.ரீ.டபள்யூ.சதுரங்க, வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், கரையோரம் பேணும் திணைக்களத்தின் மாவட்ட பொறியலாளர் எம்.துளசிதாசன், கரையோரம் பேனும் திணைக்களத்தின் திட்டமிடல் உதவியாளர் எஸ்.ஏ.பைரூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நாசிவந்தீவு சிவ வித்தியாலயத்தில் 50 தென்னை மரங்கள் நாட்டப்பட்டுள்ளதுடன், சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தினால் 10 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாசிவன்தீவு கிராமத்தில் வீடமைப்பு அதிகாரசபையினால் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தில் ஒரு வீட்டுக்கு இரு தென்னை மரங்கள் என்ற அடிப்படையில் ஐம்பது தென்னை மரங்கள் நாட்டப்பட்டுள்ளன.

இதேவேளை கோறளைப்பற்று பிரதேசசபையினால் பாடசாலைக்கு திண்மக்கழிவு அகற்றும் தொட்டிகள் ஒன்பது வழங்கி வைக்கப்பட்டதுடன், கட்டுமுறிவு வாவியும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் செயற்றிட்டம் கடந்த எட்டாம் திகதி ஆரம்பித்திருந்த நிலையில் இன்று வரை பெருந்திரளான செயற்றிட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோறளைப்பற்று, கல்குடா கிராமத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் மீன்பிடி வளங்களும், மீன்பிடிஉபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாசிக்குடா கடற்கரையில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் விஷேட தேவை உடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள், முதியோருக்கான கொடுப்பனவுகள், முதியோர் அடையாள அட்டைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா கலந்து கொண்டார்.

ஏறாவூரில் உள்ள முச்சக்கரவண்டிகளுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம் நடைபெற்றுள்ளது.

ஏறாவூர் மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் இன்று சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.