இலங்கையில் நச்சு வட்டத்தில் சிக்கும் மக்கள்! உயிரையே மாய்த்து கொண்ட நிலை

Report Print Rusath in சமூகம்

கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் கூட்டுறவு திணைக்களத்தினூடாக மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஒரு கோடி 28 இலட்சம் ரூபா சுயதொழில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நுண்கடன் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் அதனை மீள செலுத்த முடியாமல் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை நாம் அவதானித்துள்ளோம்.

இது கடன் நச்சுவட்டமாகும். மக்கள் இவ்வாறு கடன் நச்சு வட்டத்திற்குள் விழுகின்றபோது தான் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராம சக்தி ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் கூட்டுறவுத் திணைக்களத்தின் அனுசரணையில் கூட்டுறவு திணைக்களத்தின் கீழுள்ள சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி கூட்டுறவு சங்க கட்டடத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கடன்களை பெற்ற மக்கள் அதனை மீள செலுத்த முடியாமல் தங்களது உயிரையே மாய்த்து கொண்ட நிலையையும் நாம் அவதானித்துள்ளோம்.

இவ்வாறான நிலையிலிருந்து எமது மக்களை கைதூக்கி விடும் நோக்கில் தற்போது கூட்டுறவு திணைக்களத்தினூடாக மக்களுக்கு தொழில் முயற்சி கடன்களை வழங்கி வருகின்றோம்.

இலங்கையை பொறுத்தவரையில் எமது மாவட்டம் மிகவும், வறுமை மாவட்டமாக கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வெறுமனே பார்த்து கொண்டிருக்க முடியாது.

கூட்டுறவு அமைப்புக்கள் சமூக, பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்து வரும் அமைப்பாக மிளிர்கின்றது. கடந்த காலங்களில் இவ்வமைப்புக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு இயங்க முடியாமல் இருந்தன.

ஆனால் தற்போது சகல கூட்டுறவு அமைப்புக்களும், புத்துயிர் பெற்று செயற்பட்டு வருகின்றன. இலங்கையில் எந்த நிதி நிறுவனங்களும் வழங்காத வட்டி வீதமாக அதாவது 8 வீத வருடாந்த வட்டி வீத்திற்கு நாம் மக்களுக்கு இக்கடன் உதவிகளை வழங்கி வருகின்றோம்.

கூட்டுறவு நிதியில் அதிகளவு பயனாளிகளுக்கு கடனாக வழங்கிய சந்தர்ப்பம் இதுவாகத்தான் உள்ளது. இந்த நிதியை மக்கள் எக்காரணம் கொண்டும் வேறு காரணங்களுக்குப் பயன்படுத்த கூடாது. உங்களது சுயதொழில் அபிவிருத்திக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும்.

மக்கள் இவ்வாறு பெறும் கடனிலிருந்து தொழில்களை விருத்தி செய்து படிப்படியாக வருமானத்தை அதிகரித்தால் அது சிறப்பானமாக அமையும். அவ்வாறு பொருளாதார ரீதியாக பலம் பொருந்தியவர்களாக இருந்தால்தான் எதிர்காலத்தில் சிறந்த பிள்ளைகளை எமது நாட்டுக்கு வழங்க முடியும்.

அதுபோல் போதைவஸ்த்துக்களுக்கு எமது மக்கள் அடிமையாகாது அதற்குள் சிக்காமல் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இந்த மக்கள் சக்தி வாரத்தில் மக்கள் இதனையும் ஒரு கருப்பொருளாக எடுத்து செயற்பட வேண்டும்.

மக்கள் சேமிப்பு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு சேமிப்பு பழக்கத்தை பேணிவந்தால் எதிர்காலத்தில் எவரிடமும் கடன்பெறாமல் உங்களது சுயதொழில்களை மேற்கொள்ள இலகுவாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.