பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வழங்கப்பட்ட சம்பளப் பணம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பள பணமானது பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் பதற்றமான சூழலும் நிலவியுள்ளது.

டிக்கோயா, சாஞ்சிமலை தோட்ட பகுதியில் மக்கள் பாவனைக்கு பயன்படுத்தும் நீரினை தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பில் குறித்த தோட்ட உதவி முகாமையாளர் சாஞ்சிமலை தோட்ட பெண் தொழிலாளர்களை கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.

இது தொடர்பில் குறித்த உதவி முகாமையாளரை தோட்டத்தை விட்டு வெளியேருமாறு மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் தொழிலாளர்களுக்கு மாதாந்த வேதனத்தை தோட்ட உதவி முகாமையாளர் வழங்க முன்வந்தமையால் குறித்த உதவி முகாமையாளரிடம் இருந்து எங்கள் வேதனத்தை பெற்று கொள்ளமாட்டோம் என கோரி மாலை 04 மணியளவிலிருந்து இரவு 8 மணி வரை தோட்ட காரியாலயத்திற்கு முன்பு சாஞ்சிமலை தோட்டமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நோர்வூட் மற்றும் ஹட்டன் ஆகிய பொலிஸார் வரவழைக்கப்பட்ட போது மக்களுக்கு இடையில் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சாணத்தினை கரைத்து தோட்ட உதவி முகாமையாளருக்கு ஊற்றுவதற்கும் தயார் நிலையில் இருந்த வேளை பொலிஸாரின் முயற்சியால் அது முறியடிக்கபட்டது.

நோர்வூட் பொலிஸார் மற்றும் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி, குழந்தைவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சாஞ்சிமலை தோட்ட முகாமையாளர் குறித்த மக்களுக்கு வேதனத்தை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இரவு 08.30 மணியளவில் தமது வேதனத்தை பெற்று கொண்டு ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.