வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடும் வாக்குவாதம்: த.தே.ம.முன்னனி வெளிநடப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா வடக்கு பிரதேச சபையின் அமர்வில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேசசபையின் அமர்வு நெடுங்கேணி பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில், சபையின் தலைவர் ச.தணிகாசலம் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சபையில் கடந்த அமர்வின் அறிக்கை முன்வைக்கப்பட்ட போது, அறிக்கையில் தவறிருப்பதாக ஒரு சில உறுப்பினர்கள் தெரிவித்ததன் அடிப்படையில், வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 14 உறுப்பினர்கள் கூட்ட அறிக்கை பிழையானது என வாக்களித்தமைக்கு அமைவாக அறிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்களிற்கான நேர ஒதுக்கீடு தொடர்பில் பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் சபையில் ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் சஞ்சுதன் தங்களது பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்றும், தங்களது வட்டாரத்திற்கான அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், தவிசாளர் பக்கசார்பாக செயற்படுகிறார் என்றும் கருத்து தெரிவித்ததற்கு அமைவாக தவிசாளருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இச்சபை நடவடிக்கையிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான வி.சஞ்சுதன், நிரஞ்சினி, விஜிகரன் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் அண்மையில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமது கட்சிக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும், முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.