அசமந்த போக்கில் செயற்படும் வவுனியா வடக்கு தவிசாளர்

Report Print Theesan in சமூகம்

தொடர்ச்சியாக வவுனியா வடக்கு தவிசாளர் அசமந்த போக்கில் செயற்படுவதாக பிரதேசசபை உறுப்பினர் த.தமிழ்ச்செல்வன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேசசபையின் பதினோராவது சபை அமர்வு இன்று நடைபெற்றுள்ளது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட இரண்டு முக்கிய பேசுபொருளாக இருக்கின்ற விடயங்கள் என்னால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரேரணைகளாக கொண்டு வரப்பட்டது.

1.ஊற்றுக்குளம், கச்சன்சமளங்குளம் பகுதிகளில் சட்டவிரோதமாக இடம்பெரும் சிங்கள குடியேற்றத்தை நிறுத்துவது.

2.வெடுக்குநாறிமலை சிவன் ஆலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு தொல்லியல் திணைக்களம் உடன் விடுவிக்க வேண்டும் அல்லது அனுமதி தரவேண்டும்.

ஆகிய பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு சபை உறுப்பினர்களால் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட அன்று தவிசாளர் இரண்டு பிரேரணைகளுக்கும் உடன் நடவடிக்கை எடுப்பதாகவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு உடனே கடிதம் அனுப்புவதாகவும் தெரிவித்திருந்தார் ஆனால் அது நடக்கவில்லை.

கடந்த அமர்வில் இந்த பிரேரணைகள் தொடர்பில் தவிசாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தேன் கடிதம் அனுப்பப்பட்டதா? என்று அதற்கு தவிசாளர் இல்லை எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்றார்.

மீண்டும் இன்று நடைபெற்ற 11 வது அமர்விலும் அந்த பிரேரணைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினேன் அதற்கு தவிசாளர் இன்னும் எழுதவில்லை. கடிதம் எழுதும் போது சொல்கின்றோம் நீங்களும் வருகை தந்து உதவி செய்து கொடுங்கோ என பதிலளித்திருந்தார்.

இவ்வாறு பொறுப்பற்ற இவரது செயற்பாடுகள் வேதனையளிக்கின்றது. ஊற்றுக்குளம் கிராமத்தை நெருங்கியிருக்கும் சிங்கள குடியேற்றம் நெடுங்கேணியை அண்மித்த பின்னரா தவிசாளர் உரிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுத போகின்றார் என்ற கேள்வியும் எழுகின்றது.

இது மட்டுமல்லாது பல விடயங்களில் இவர் இவ்வாறான அசமந்த போக்கில் தான் செயற்பட்டு வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.