அம்பாறைக்கு இடமாற்றப்படவிருந்த கல்முனை மாநகர சபைக் கட்டடம் திறந்து வைப்பு!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

அம்பாறைக்கு இடமாற்றப்படவிருந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) கல்முனைப் பிராந்தியக் காரியாலயம், கல்முனை மாநகர சபைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் லலித் விஜயரட்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்தை மூடிவிட்டு, அதன் பணிகளை அம்பாறை நகரில் அமைந்துள்ள மாவட்டக் காரியாலயத்தில் முன்னெடுப்பதற்கு கடந்த பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் அதன் தலைமையகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

கடந்த பல வருடங்களாக தனியார் கட்டடமொன்றில் இயங்கி வந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்திற்கு சொந்தக் கட்டடம் இல்லாதிருப்பதையும் வாடகைப் பணம் அதிகம் செலுத்தப்படுவதாகவும் காரணம் காட்டி, அதனை மூடிவிடுவதற்கான எழுத்து மூல உத்தரவு நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் கல்முனை மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த காரியாலயத்திற்கு கல்முனை மாநகர சபையில் இடமளிப்பதற்கு அவர் தீர்மானம் மேற்கொண்டதுடன் அதற்கான இணக்கத்தைத் தெரிவித்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

அத்துடன் இப்பிரச்சினையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இக்காரியாலயத்தை மூடும் தீர்மானம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் ஜகத் முனசிங்கவினால் இரத்து செய்யப்பட்டதுடன் இதனை கல்முனை மாநகர சபையில் இயங்கச் செய்வதற்கும் அங்கீகாரம் வழங்கியிருந்தார்.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபையின் பொறியியல் பிரிவு இயங்கி வந்த கட்டிடத்தில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்தை அமைப்பதற்கு மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் நடவடிக்கை எடுத்திருந்தார்.

கல்முனை மாநகர சபையின் பொறியியல் பிரிவு, தற்போது கல்முனை பொது நூலகத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த பெப்ரவரி மாதம் இக்காரியாலயத்தை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, எனது வேண்டுகோளையேற்று எமது கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் துரிதமாக செயற்பட்டு, இதனைக் கல்முனையில் தொடர்ந்தும் இயங்கச் செய்வதற்காக UDA தவிசாளரின் அங்கீகாரத்தை பெற்றுத்தந்தமைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அதேவேளை கல்முனைப் பிராந்திய மக்களின் தேவைகளை துரிதமாக நிறைவு செய்து கொடுக்கும் பொருட்டு, இக்காரியாலயத்தின் ஆளணி மற்றும் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

கையொப்பமிடுகின்ற அதிகாரமுடைய உதவிப் பணிப்பாளர் ஒருவர் இக்காரியாலயத்திற்கென நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்.

கல்முனை மாநகரமானது சனநெரிசல் மிக்க பிரதேசமாக இருப்பதனால் 03 பேச்சர்ஸ் அளவு கொண்ட நிலத்தில் வீடு மற்றும் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும்.