நோயாளர் நலன்புரி சங்க நடவடிக்கைக்கு தடை விதித்துள்ள வைத்தியசாலை நிர்வாகம்

Report Print Yathu in சமூகம்

வடக்கு மாகாண பிரதம செயலாளரின் சுற்றறிக்கைக்கு அமைவாக சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் தடுத்துள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட மிகவும் பின் தங்கிய பிரதேச மக்களுக்கான மருத்துவ தேவைகளை தற்போது சிறப்பாக வழங்கி வருகின்ற மாவட்ட பொது வைத்தியசாலையின் வளர்ச்சியை விரும்பாத சிலர் குறுகிய அரசியல் நோக்களுக்காக அதனைத் தடுக்கும் விதத்தில் செயற்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வடக்கு மாகாண பிரதம செயலாளரின் சுற்றறிக்கைக்கு அமைவாக சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கடந்த நிர்வாகத்தின் கணக்கறிக்கை மற்றும் கணக்குகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது எந்தவிதமான குறைபாடுகள் இன்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து புதிய நிர்வாகத் தெரிவு மேற்கொள்ளப்பட்ட நிலையில் அரசியல்கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ஏற்படுத்திய குழப்பம் காரணமாக குறித்த நிர்வாகத் தெரிவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்கிக் கணக்குகள் மற்றும் முன்னைய நிர்வாகத்தின் செயற்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

வடக்கு மாகாண பிரதம செயலாளரின் சுற்றறிக்கைக்கு அமைவாக சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இவ்வமைப்பினை சட்டதிட்டங்களுக்கு மாறாக அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக இதன் நிர்வாகச் செயற்பாட்டை முடக்கியமையானது ஏற்றுக்கொள்ள முடியாது என பலரும் தெரிவித்துள்ளனர்.

2010ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரைக்குமான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இயங்கி வந்த மேற்படி நிர்வாகத்தின் நிதி மற்றும் கணக்கறிக்கைகள் தொடர்பில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாத நிலையில் 2017ஆம் ஆண்டில் இதற்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதையடுத்து 60 இலட்சம் ரூபாய் நிதியை வருமானமாகப் பெற்றுள்ளதுடன், வைத்தியசாலையிலும் நோயாளர்களுக்கும் பல்வேறு சேவைகளை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் சங்கத்தின் நிர்வாகத் துஸ்பிரயோகம் அல்லது நிதி மோசடிகள் என்பன தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் இது தொடர்பில் விசாரிப்பதற்குமாகவே குறித்த கணக்குகளை நிறுத்தி வைக்கமுடியும் என இதன் யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையினுடைய பணிப்பாளர் இன்று தொடர்பு கொண்டு வினவிய போது, நோயாளர் நலன்புரி சங்கத்தின் நிர்வாகத்தின் போது, ஏற்பட்ட குழப்பம் காரணமாக இதன் தெரிவு நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பிரதேச செயலாளர் அவர்களுக்கு தான் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதுடன், அரசியல் நோக்கங்களுக்காக சிலர் வைத்தியசாலையை பயன்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.