ஈழ தமிழர்களுக்காக வத்திக்கானின் கதவு ஏன் தட்டப்படவில்லை? தவறு யாரிடம்

Report Print Sujitha Sri in சமூகம்
595Shares

திருத்தந்தை பிரான்சிஸ் தெற்கு சூடானின் அதிபர் மற்றும் எதிரணி தலைவர்களின் கால்களில் விழுந்து உள் நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருமாறு வேண்டிய சம்பவம் இலங்கை தமிழர்களையும், தமிழ் தலைமைகளையும், ஆன்மீக தலைவர்களையும் சிந்திக்க வைத்துள்ளது.

தெற்கு சூடானில் ஐந்து ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வருகிறது. 400,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கோடிக்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் எதிரணி தலைவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தில் கடந்த மாதம் அதிபர் சால்வா கீர், வத்திகானில் திருத்தந்தையை சந்தித்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமுலுக்கு கொண்டு வரவும், மே மாதம் இரண்டு அணி தலைவர்களையும் கொண்டு ஒரு கூட்டணி சமாதான அரசை நிறுவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வத்திக்கானில் ஒரு தியானம் (Retreat) ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் கூட்டத்தின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் தெற்கு சூடானின் அதிபர் மற்றும் எதிரணி தலைவர்களின் கால்களில் விழுந்து உள்னாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு வேண்டியுள்ளார்.

இந்த சம்பவம் உலகத்திலுள்ள அனைத்து மக்களையும் நெகிழ்ச்சியிலும், கண்ணீரிலும் ஆழ்த்தியுள்ள போதும் தமிழர்களின் மத்தியில் இன்னொரு படி உயரத்திற்கு சென்று சிந்திக்க வைத்துள்ளது.

தென்சூடான் மீது இவ்வளவு அக்கறை கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் சமாதானத்தை வேண்டி கால்களில் விழுந்து முத்தமிட்ட சம்பவம் போரை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற அவரின் அக்கறையை எடுத்துக்காட்டுகிறது.

ஆனால் 2013ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் 26ஆவது திருத்தந்தையாக பதவியேற்ற பாப்பரசர் பிரான்சிஸ், இலங்கை தமிழர்களுக்கு நடந்த அநீதி விடயத்தில் மாத்திரம் தலையீடு செய்யாதது ஏன் என்ற கேள்வி மேற்படி சம்பவத்தின் பின் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

அதற்கு தென்சூடான் பிரச்சினை பாப்பரசரிடம் கொண்டு செல்லப்பட்டதை போல் இலங்கை தமிழர்கள் பட்ட அவலங்கள் பாப்பரசருக்கு முன்னால் கொண்டு செல்லப்படவில்லை என கூறுகின்றனர் அரசியல் அவதானிகள்.

இலங்கையில் மனித பேரவலம் நடந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள போதும் இது வரையில் இலங்கை அரசோ, சர்வதேச சமூகமோ எவ்வித தீர்வினையும், நீதியையும் பெற்றுத் தரவில்லை.

இவ்வாறான நிலையில் குறித்த விடயத்தை சரியான முறையில் பரிசுத்த பாப்பரசருக்கு கொண்டு சென்றிருந்தால் இந்த விடயத்தின் மீது அவர் கொள்ளும் அக்கறையே சிறந்ததொரு தீர்வினை விரைவில் பெற்றுத் தந்திருக்கும்.

எனினும் ஏன் தமிழ் அரசியல் தலைமைகளோ, ஆன்மீக தலைவர்களோ இதனை சரியாக அணுகவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. இலங்கை தமிழர்கள் விடயத்தை முதன்முதலாக வந்திக்கானுக்கு மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசேப்பு ஆண்டகையே கொண்டு சென்றார்.

எனினும் அதற்கு பின்னர் யாரும் இந்த விடயத்தை பாப்பரசருக்கு தெரியப்படுத்தியதாகவோ, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை பெற்றுத்தருமாறு அவரிடம் கோரியதாகவோ அறியக்கிடைக்கவில்லை என்பதே உண்மை.

வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டிலும் சரி, பழைய ஏற்பாட்டிலும் சரி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அப்படியாயின் இலங்கையிலுள்ள ஆயர்கள், இன நல்லிணக்கத்துடன் வாழ முடியும் என கூறி கடந்த காலத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை எவ்வாறு மறக்க முடியும்?

ஏன் ஈழ தமிழர்களுக்காக வத்திக்கானின் கதவு தட்டப்படவில்லை? இனிமேலாவது ஈழத்தமிழர்கள் விடயத்தில் அக்கறை காட்டும் யாரேனும் பாப்பரசரிடம் இவ்விடயத்தை கொண்டு சென்று தீர்வினையும், நீதியையும் பெற்றுத் தர விளைவார்களா...?

மேலும், பாப்பரசராக பதவியேற்ற திருத்தந்தை பிரான்சிஸ், பிரேசில் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார். அதன்பின் ஆசிய நாட்டிற்கான அவரின் முதல் விஜயமும், மூன்றாவது விஜயமும் இலங்கை திருநாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You my like this video