சாதாரண தர பரீட்சையில் கடமையாற்றியவர்களுக்கான கொடுப்பனவில் தாமதம்

Report Print Kaviyan in சமூகம்

கடந்த 2018ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இக் கொடுப்பனவுகள் வழங்கப்படாத நிலையில் கடந்த மாதம் சுட்டிக்காட்டப்பட்ட போது, பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்படாமையால் அவற்றை வழங்க முடியவில்லை விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கமும் இது தொடர்பில் சுட்டிக்காட்டியதற்கமைவாக கடந்த மாதம் முற்பகுதியில் பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்ட சில ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனாலும் பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்ட பலருக்கான கொடுப்பனவுகள் இன்று வரை வழங்கப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்ட போது, பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டவர்களுக்குரிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி எவையும் அரசினால் ஒதுக்கப்படாத நிலையில் தற்போது தான் நிதி பெறப்பட்டு அனைவரதும் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவுகள் வைப்பிலிடப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் தமக்கான கடமைக் கொடுப்பனவுகள் இன்று வரை வங்கிகளில் வைப்புச் செய்யப்படவில்லை என கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாத ஆசிரியர்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் அனைவருக்கும் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அரசு கூறும் நிலையில் கடமையில் ஈடுபட்ட பலரும் தமக்கான கொடுப்பனவுகள் எவையும் தமது வங்கிக் கணக்குகளிலோ அல்லது நேரடியாகவோ இன்றுவரை வழங்கப்படவில்லை எனக் கூறுகின்றனர்.

இந்நிலையை வைத்து நோக்கும் போது இதற்குள் ஏதோ முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவே நோக்க முடிகின்றது.

முன்னைய ஆட்சிக் காலங்களில் பரீட்சைப் பெறுபேறுகள் வருவதற்கு முன்னரே பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் அனைத்தும் ஒரு ஒழுங்கு முறைப்படியும் வெளிப்படைத் தன்மையுடனும் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.