இலங்கைக்கு பெருமை சேர்க்கும் விடயம்! கூறும் தென்னிந்திய பிரபலம்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

உலகிலுள்ள அனைவருக்கும் இலங்கையில் பேசப்படும் தமிழே பிடிக்கும் என்பது இலங்கை திருநாட்டிற்கு பெருமை சேர்க்கும் விடயமாகும் என தென்னிந்தியாவின் இலக்கிய விற்பன்னர் கவிஞர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.

பாடலாசிரியரான, நாவலாசிரியரான, சிறுகதை எழுத்தாளரான மற்றும் சிறந்த கவிஞரான வித்யாசாகர் கடந்த சனிக்கிழமை சம்மாந்துறைக்கு விஜயம் செய்திருந்தார்.

சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மகளிர் தின கவியரங்கிற்கு தலைமை தாங்குவதற்காக வந்திருந்த அவருக்கு அங்கு "கவி வேந்தர்" விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது எமது செய்தியாளருக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கேள்வி: பொறியியலாளரான தங்களுக்கு தமிழில் குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு வர காரணம் என்ன?

பதில்: ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் பற்று மண்பற்று கட்டாயம் இருக்க வேண்டும். அரசியல், பிரதேச, இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழில் கட்டாயம் ஆர்வமிருக்க வேண்டும்.

கேள்வி: இதுவரை வந்த உங்கள் இலக்கியப்படைப்புகள் பற்றி கூறமுடியுமா?

பதில்: இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை பார்த்திருக்கிறேன். பலவற்றை இலக்கியப் புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறேன். பல நாவல்கள் குறுநாவல்கள் போன்ற எண்ணற்ற கதைகள் வெளிவந்துள்ளன.

60 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி வெளியிட்டிருக்கிறேன். பறக்க ஒரு சிறகு கொடு, சில்லறை சப்தங்கள், விடுதலையின் சப்தம் போன்ற கவிதைத் தொகுப்பு நூல்களையும், ஓட்டைக்குடிசை எனும் சிறுகதை தொகுப்பு மற்றும் கொழும்பு வழியே ஒரு பயணம் எனும் ஈழத்து தமிழர் வரலாற்று நாவல் போன்ற நூல்கள் முன்பே வெளியிடப்பட்டவை என்றாலும் அவைகளை இங்கே இம்மண்ணிற்கு அறிமுகம் செய்துவைக்க விருக்கிறேன்.

2010ஆம் ஆண்டில் முதன்முதலாக பிறந்தநாள் பாடலை இசைவடிவாக்கி நமது உலக தமிழர் பயன்படுத்தும் வண்ணம் முகில் படைப்பாக்கம் வழியே வெளியிட்டோம்.

அது ஈழத்தமிழ் மக்களால் இன்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

கேள்வி: தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே தமிழ் வளர்ச்சியிலுள்ள வேறுபாடு பற்றிக்கூறுங்கள்?

பதில்: சென்னை உலகத்தமிழர்கள் சங்கமிக்கின்ற இடம். தமிழர்கள் பலவாறு பல இடங்களிலிருந்து வந்து சந்திக்கின்ற இடம். அங்கு தமிழ் வளர்ச்சியை பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

அங்கு அநேகர் அதற்காக உள்ளனர். ஆதலால் அது அங்கே இயல்பாக நடக்கிறது என்பதால் அங்கிருக்கும் எங்களுக்கு மொழி வளர்ச்சி என்பது பெரிதாக தெரிவதில்லை.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதற்கிணங்க அங்கிருந்து வெளியேறினால் அதன் வித்தியாசம் நன்கு உணரலாம். என்றாலும், உலகலாவியுள்ள அனைத்து தமிழர்களும் நமது தமிழ் வளர்ச்சியின் நன்றிக்கு உரியவர்கள் என்பது மிக முக்கியமானது.

இன்றும், உலகநாடுகளிலுள்ள பன்னிரண்டரை கோடி தமிழர்கள் தமது பண்பாடு, இன, மொழி அக்கறை அதோடு நமது பாரம்பரியங்களையும் மறக்காமல் பாதுகாத்து வருகிறார்கள்.

கேள்வி: ஈழத்துப்போர் பற்றி அறிந்திருப்பீர்கள். அதுபற்றி இலக்கியம் ஏதாவது செய்துள்ளீர்களா?

பதில்: விடுதலைக்காக தன்னை தியாகம் செய்தவர்களை யாரும் மறக்கக்கூடாது. அவர்கள் பிறருக்காக இரத்தம் சிந்திய மறவர்கள். மண்ணின் விடுதலை நோக்கோடு உயிர்விட்டவர்களை எடைதூக்கி சீர் காணல் அறமன்று.

அவர்களுக்க பல பாடல்களை ஆக்கியுள்ளேன். கவிதை தொகுப்புகள், கொழும்பு வழியே ஒரு பயணம் என எண்ணற்றவை உண்டு.

கேள்வி: இறுதியாக ஈழத்து தமிழிலக்கிய படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விளைகிறீர்கள்?

பதில்: ஈழத்தில் பல இலக்கிய முயற்சிகள் நடந்தேறி வருகின்றன. இங்குகூட பாவலர் ஈழமேகம் பாக்கீர்த்தம்பியின் நினைவரங்கில் கவியரங்கு நடத்துகிறது.

கவிஞர்கள் பாகுபாடின்றி கலந்து சிறப்பித்தார்கள். இஸ்லாமியர்கள் வேறு தமிழர்கள் வேறு அல்ல. மொழியால் இணைந்த இனம் இது. நமது ஒற்றுமை தான் நமது பலம்.

அவ்வாறு நாம் உலகளவில் தமிழ் பேசும் அனைவரும் மொழி வழியே ஒன்றுகூடி இணக்கமாக வாழ்ந்து விட்டால் இவ்வுலகை மிக உயர்ந்த அறத்தினோடு அரவணைப்போடு பாதுகாத்திட நம்மால் இயலும்.

ஈழத்தில் மிக நேர்த்தியான படைப்பாளிகள் உள்ளனர். தமிழ் பேசும் மக்கள் நமது கலைகளை இலக்கியங்களை தக்கவைத்து கொள்ள தொடர்ந்து பாடுபடுகின்றனர். எனவே ஈழத்து படைப்பாளிகள் வெளி உலகிற்கு வரவேண்டும்.

கேள்வி: இறுதியாக ஈழத்து படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: ஒருகாலத்தில் ஒன்றாக இருந்த தமிழ்நாட்டையும் ஈழத்தையும் கடற்கோள் பிரித்ததாக கூறுவர். எது எதைப்பிரித்தாலும் எமது பாரம்பரிய உறவை யாராலும் பிரிக்க முடியாது. அதுபோன்று தமிழால் என்றும் நாம் இணைந்திருப்போம்.