இராணுவ முகாம்களுக்குள்ளே சோதனையிட்ட ஐ.நா குழு!

Report Print Murali Murali in சமூகம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழு, இராணுவ முகாம்கள், தடுப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த குழுவின் தலைவர் விக்டர் சகாரியா இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான தமது பயணத்தை முடித்துக்கொண்ட இந்த குழு நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தது.

இதன்போது கருத்து வெளியிட்டிருந்த அதன் தலைவர் விக்டர் சகாரியா இவ்வாறு கூறியுள்ளார். “இந்தப் பயணத்தின் போது எமக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

தடுப்பு நிலையங்கள் அனைத்துக்கும் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களையும் பெறுவதற்கும், இரகசியமாக நேர்காணல்களை நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.

சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்துக்கு ஏற்ப, ஒரு தேசிய தடுப்பு பொறிமுறையை உருவாக்குவதில், இலங்கை சாதகமான நிலையில் உள்ளது.

இரகசியத்தன்மை, பாரபட்சமின்மை, சார்பற்ற தன்மை, உலகளாவிய தன்மை மற்றும் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் எமது பணி வழிநடத்தப்படுகிறது.

எமது குழுவினர் பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள், புனர்வாழ்வு முகாம்கள், மனநல அமைப்பு, சிறார் புனர்வாழ்வு நிலையம், ஆகியவற்றுக்குச் சென்று பார்வையிட்டனர்.

அத்துடன், அரசாங்கப் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அடுத்தாக, எமது உப குழு, இந்தப் பயணத்தின் கண்டறிவுகள் தொடர்பாக இலங்கைக்கு இரகசிய அறிக்கை ஒன்றை அளிக்கும். அதில் எமது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளைக் குறிப்பிடுவோம்.

இந்த அறிக்கையை அரச தரப்புகள் பகிரங்கப்படுத்துவதையும், ஐ.நா உபகுழு ஊக்குவிக்கும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் நால்வர் முதல் முறையாக கடந்த 2ம் திகதி இலங்கைக்கான வியஜத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers