குடிநீர் கேட்கும் எங்களுக்கு மதுபானசாலையா தீர்வு - கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Suman Suman in சமூகம்

சுத்தமான குடிநீர் கேட்கும் எங்களது கிராமத்திற்கு மதுபானசாலையா தீர்வு என கிளிநொச்சி - பெரிய பரந்தன் கிராம மக்கள் ஐந்தாவது தடவையாக புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலக முன்றலில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

தங்களது பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எங்கள் கிராமத்தில் இவ்வாறு புதிய மதுபானசாலை ஒன்று அமைவது எமது வாழ்க்கையினை சீரழிக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். மது பழக்கத்தை நோக்கி வேகமாக இழுத்துச் செல்லப்படுவதற்கு இது காரணமாக அமைந்துவிடும்.

இதனை தவிர இரணைமடு பாடசாலைகள், ஒரு சிறுவர் இல்லம், தனியார் கல்வி நிலையம் என்பன இந்த சூழலில் காணப்படுகிறது. எனவே இங்கு மதுபானசாலை அமைக்கப்படுவது பொருத்தமற்றது.

இன்று கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர், சட்டத்தரணிகள், புதிய மதுபானசாலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் அதிபர்கள் பெரிய பரந்தன் கிராம மக்கள் அமைப்புகள் ஆகியோர் சமூகமளித்து எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

மேலும் கரைச்சி பிரதேச செயலாளர், நில அளவை திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

வேண்டாம் வேண்டாம் மதுபானசாலை வேண்டாம், குடிப்பதற்கு சுத்தமான நீரை வழங்கு மதுபானத்தை அல்ல, குடி நீர்க்கு போராடும் எங்களுக்கு மதுபானசாலையா? பெரிய பரந்தன் மக்களின் வாழ்வாதாரத்“தை அழிக்கும் மதுபானசாலை வேண்டாம், மாணவிகள் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் மதுபானசாலை வேண்டாம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Latest Offers