தமிழர் பகுதியை சேர்ந்தவர்களின் உயிர் பறிபோன சம்பவம்! அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்

Report Print Sujitha Sri in சமூகம்

நவீன மயமான இந்த உலகில் உணவு, உடை, உறையுள் என்ற மூன்றையும் தாண்டி பல விடயங்கள் நமது அத்தியாவசிய தேவைகளாகி விட்டன. குறிப்பாக தொலைத்தொடர்பாடல் சாதனங்கள், போக்குவரத்து சாதனங்கள், மின்சாரம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதிலும் குறிப்பாக போக்குவரத்து சாதனங்கள். தற்போது இலங்கையில் பெரும்பாலான வீடுகளில் ஒரு மோட்டார் வாகனமாவது காணப்படுகின்றமையானது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆனால் இந்த மோட்டார் வாகனங்களை நாம் வீதி விதிகளுக்கு உட்பட்டு பயன்படுத்தினால் எவ்வித தீங்கும் நேராது. எனினும் பலர் இந்த உண்மையை புரிந்து கொள்ளாது வீதி விதிமுறைகளுக்கு அப்பால் செயற்படுகின்றனர்.

ஆம், இதனைப்பற்றி பேச வேண்டிய தருணம் தான் இது. ஏனெனில் முழு இலங்கையையுமே உலுக்கிய கோர சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றிருந்து.

இதில் பெரியவர்கள், சிறுவர்கள் என பாரபட்சமின்றி பத்து பேரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தன. தமிழர் பகுதியான மட்டக்களப்பை சேர்ந்த ஒரே குடும்பமான தாய், தந்தை, இரட்டை பெண் பிள்ளைகள், மற்றுமொரு குடும்பத்தின் தாய், தந்தை, அவர்களின் மகனான 19 வயது இளைஞர், மற்றுமொரு தம்பதி, பெண் பிள்ளை ஒன்று என மொத்தமாக பத்து பேரின் உயிர் இவ்வுலகை நீங்கி விண்ணுலகம் சென்றது.

அதிவேகத்துடன், தவறான திசையில் வான் பயணித்தமையே இந்த விபத்து ஏற்பட காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இதேவேளை வானின் முன் பகுதியில் அமர்ந்திருந்த சிறுமி ஆசன பட்டி அணிந்துள்ளமை தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் ஏனையவர்கள் வானின் பின்புறமுள்ள ஆசனங்கள் அனைத்தையும் நீக்கி விட்டு மெத்தையிட்டு அமர்ந்து பயணித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் உயிரிழந்த 19 வயது இளைஞரே வானை செலுத்தியுள்ளார். இந்த விபத்தில் சிறுமிகள் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், அவர்கள் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் தற்போதைய நிலை தொடர்பில் வைத்தியர் கூறுகையில், மஹியங்கனை வைத்தியசாலையில் இருந்து 15 மற்றும் 13 வயதான இரு சிறுமிகள் எமது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

15 வயது சிறுமி சுவாச இயந்திரங்களின் உதவியுடன் வாழ்ந்து வருகிறார். அவரின் நிலைமை சிறந்த மட்டத்தை அடைந்து வருகிறது. மற்றைய சிறுமியின் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அதுவே பாரிய அபாயமாகும். அத்துடன் வயிற்றின் உட்புறத்தில் பலமாக அடிபட்டுள்ளது. எனினும் அவரின் நிலை ஓரளவு சிறந்த மட்டத்தில் காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்து மாத்திரமல்லாது இலங்கையின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றமையை ஊடகங்களில் தினம் தினம் வெளியாகும் செய்திகளின் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

வீதி விதி மீறல்களால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காகவே விதி மீறல்களுக்கான அபராத தொகைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது. எனினும் இது மாத்திரம் போதாது என்பது பதிவாகி வரும் விபத்துக்களின் மூலம் தெரியவருகிறது.

எனவே போக்குவரத்து பொலிஸார் இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி வீதி விதிகளை பின்பற்றாதோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். கவனயீனமாக வாகனங்களை செலுத்த முற்படும் போது பல விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

அதிக வேகம், மற்றுமொரு வாகனத்தை முந்த முற்படல், மதுபோதையில் வாகனங்களை செலுத்துதல், கார் மற்றும் வான் போன்ற மோட்டார் வாகனங்களில் ஆசன பட்டி அணியாமை, தூக்க கலக்கத்தில் வாகனம் செலுத்துதல் போன்ற காரணங்களினாலேயே பாரியளவான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

அத்துடன் தூர பிரயாணங்களை மேற்கொள்பவர்கள் தமது பயணத்தின் போது சிறிது நேரம் கூட வாகனத்தை நிறுத்துவதில்லை. இது மிகப்பெரிய தவறாகும். அதேவேளை வாகனத்தை செலுத்துபவர்கள் கைபேசியில் அழைப்பு வருமாயின் வாகனத்தை பாதையோரத்தில் நிறுத்தி விட்டு பதிலளிக்க முடியும்.

மேலும், தூர இடங்களுக்கு வாகனங்களை செலுத்துவதற்காக சாரதிகளை அழைத்து செல்பவர்கள் அவர்களின் உணவு மற்றும் தூக்கம் தொடர்பில் அக்கறை கொள்வது அவசியமாகும்.

இனிமேலும் உயிர்களை காவு கொடுப்பதை சகித்துக் கொள்ள முடியாது. தமது உயிர் மாத்திரமல்லாமல் ஏனையவர்களின் உயிர் மீதும் அக்கறையின்றி செயற்படும் சாரதிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு இலங்கையரதும் கடமையாகும்.

Latest Offers