ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தும் யாழில் முகத்தை மறைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்த கும்பல்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைந்த பின்னர், தென்மராட்சி கோயிலாக்கண்டியில் வீடு புகுந்த கொள்ளையர்கள் 28 பவுண் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது என்னும் அச்சம் இலங்கையர்களை வாட்டிக் கொண்டிருக்கும் இந்நிலையில், அதிபயங்கரமான குண்டுகளும் ஆங்காங்கே மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையி்ல இன்று இரவு ஒன்பது மணியிலிருந்து காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை தென்மராட்சிப் பகுதியில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையினைக் காட்டியுள்ளனர்.

ஆறு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் தென்மராட்சி கோயிலாக்கண்டியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகரின் வீட்டிற்குள் உள்நுழைந்து, வீட்டிலிருந்த மூவரையும் மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் அலுமாரியிலிருந்த நகைகள் என மொத்தம் 28 பவுண் தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள பாதிக்கப்பட்டவர்கள், கொள்ளையர்கள் 6 பேரும் முகத்தைத் துணியால் மறைத்திருந்தனர் என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைவாக தீவிர விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.