வவுனியாவில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட சந்தேகநபர்கள்

Report Print Theesan in சமூகம்

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து வவுனியா முழுவதும் 500 இற்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அரபா நகர் பகுதியில் சுற்றி திரிந்த நபரொருவரை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் அடையாள அட்டை இருக்காத காரணத்தால், அவரது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் அவரது வீட்டிலிருந்து இராணுவத்தினரின் தொப்பி மற்றும் ஆடை என்பவற்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், செக்கட்டிப்புலவு அரபாநகர் பகுதியினை சேர்ந்த 39 வயதுடைய குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், வவுனியா - நெளுக்குளம் பொலிஸார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இராசேந்திரகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் திரிந்த நபர் ஒருவரை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் அவரின் அடையாள அட்டை பதிவு நீர்கொழும்பு என காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து மே்றகொள்ளப்பட்ட விசாரணைகளின் போது முன்னுக்குப் பின் மாறுபட்ட கருத்துக்களை அந்த நபர் தெரிவித்தமையினால் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.