தவ்ஹீத் ஜமாஅத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேகநபர்கள் பிணையில் விடுவிப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேகநபர்களை இன்று பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புல்மோட்டை பகுதியில் தெரு பயான்களை நடத்தி வருவதாகவும், ஒவ்வொரு வீதிகளிலும் ஒலிப்பெருக்கிகளை வைத்துக்கொண்டு இளைஞர்களை ஒன்றிணைத்து இளைஞர்களுக்கு மாத்திரம் உபதேசம் மேற்கொண்டு வருவதாகவும் பிரதேச மக்கள் புல்மோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த ஏழு பேரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.

தங்களுக்கும் தவ்ஹீத் ஜமாத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தாங்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படப் போவதில்லை எனவும் பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களை தீவிர விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல நேற்றிரவு விடுவித்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 28,30,31,35 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.