பொலிஸாரால் தேடப்படும் பெண்ணை கிளிநொச்சி தேவாலயத்தில் கண்டேன்! அருட்தந்தை யேசுதாஸ்

Report Print Suman Suman in சமூகம்

சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தி தேடப்படுவதாக தெரிவித்து பொலிஸார் வெளியிட்டுள்ள படங்களில் உள்ள ஒரு பெண்ணை பார்த்துள்ளதாக கிளிநொச்சி புனித திரேசா தேவாலய அருட்தந்தை யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி, தான் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது குறித்த பெண் ஆலயத்திற்கு வருகை தந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் சர்வமத கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் பட்டியலின் இறுதியில் உள்ள புகைப்படத்தில் உள்ள பெண் எமது தேவாலயத்திற்கு வருகை தந்திருந்தார்.

அதிகாலை வழமை போன்று தேவாலயத்தின் கதவை திறந்து உள் சென்ற போது சிறிது நேரத்தில் குறித்த நபர் தேவாலயத்தின் மத்தியில் நின்றிருந்தார்.

நான் அப்போது பாரிய அளவில் சந்தேகம் கொண்டிருக்கவில்லை. இன்றிருந்த சூழல் இருந்திருந்தால் நான் சந்தேகப்பட்டிருப்பேன். நள்ளிரவு ஆராதனை முடித்து மக்கள் சென்று விட்டனர்.

குறித்த நபர் நான் தேவாலயத்திற்குள் பிரவேசித்த போது அங்கு மத்தியில் நின்றார். முழு பாவாடை போன்று உடை அணிந்திருந்தார்.

நாட்டில் தற்போது உள்ள சூழலில் நாம் அமைதியாக செயற்பட வேண்டும் எனவும், ஏனைய மதங்களை மதித்து நடந்து கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரைச்சி பிரதேசசபையின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இஸ்லாமிய மத குருக்கள், மதத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலதிக செய்திகள் - யது