வெள்ளவத்தை முகவரியில் தேசிய அடையாள அட்டை வைத்திருந்த யாழ். இளைஞர் விளக்கமறியலில்

Report Print Sumi in சமூகம்

கொழும்பு - வெள்ளவத்தை முகவரியில் தேசிய அடையாள அட்டை வைத்திருந்ததுடன், பொலிஸாரின் விசாரணையில் மாறுபட்ட தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்.இந்துக் கல்லூரிக்கு முன்பாக சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.

அதன் உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்துக்கு வந்து தனது மோட்டார் சைக்கிள் என உரிமை கோரியுள்ளார்.

இதன்போது இளைஞனின் தேசிய அடையாள அட்டையைப் பார்வையிட்ட பொலிஸார், அதில் வெள்ளவத்தை என முகவரியிடப்பட்டிருந்தது குறித்து விசாரணை செய்துள்ளார்.

குறித்த இளைஞன் மாறுபட்ட தகவல்களை வழங்கியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவர் உயர் கல்வியை கொழும்பில் தொடர்ந்துவிட்டு தற்போது நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.

அவரது மோட்டார் சைக்கிளை நண்பர் ஒருவர் எடுத்துச் சென்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையாக விட்டு வடமராட்சிக்கு பேருந்தில் சென்றுவிட்டார்.

அதன்பின்னரே பொலிஸார் அந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர். அதனை உரிமை கோரி பெற்றுக்கொள்ள வந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.