ஜே.வி.பி இணையத்தளங்களிற்கு எதிராக அரசியல் முக்கியஸ்தர்கள் முறைப்பாடு

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு தற்கொலையாளியை நன்கு அறிந்த தமிழ் பேசும் முக்கிய அமைச்சர் எனும் தலைப்பில் எமது சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவை தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட முற்றிலும் உண்மைக்கு புறம்பான, ஆதாரங்களும் அற்ற செய்தி தொடர்பில் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊடகப்பிரிவு அண்மையில் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேலும் அவ் அறிக்கையில்,

அனைத்து மக்களோடும் சகிப்புத் தன்மையோடும், சரியான புரிதலோடும் பேதங்களற்ற முறையில் செயலாற்றுகின்ற தனித்துவமான பண்பினைக் கொண்ட மக்கள் பிரதிநிதியான அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவை, அவர் முற்று முழுதாக வெறுக்கின்ற, கண்டிக்கின்ற மிலேச்சத்தனமான பண்புகளை கொண்ட தீவிரவாத குழுக்களோடு தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டு மக்களை குழப்புகின்ற செயற்பாட்டை முன்னெடுப்பது மிகவும் கீழ்த்தரமானதும் மோசமானதுமான ஒரு செயற்பாடாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

எவ்வித ஆதாரங்களும் அற்றதான உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியினை ஊடக தர்மத்தினை எல்லாம் புறம் தள்ளி விட்டு வெறும் அரசியல் காழ்ப்புணர்வுகளை மையமாக வைத்து வெளியிடுவது ஊடகத்தின் பொறுப்பற்ற தன்மையையும் அதன் நம்பகத்தன்மையை கேள்விக்கும், கேலிக்குட்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

மட்டக்களப்பிலே சம்பவம் இடம்பெற்ற ஞாயிற்றுக்கிழமை அன்று விடியற்காலை முதல் சமுர்த்தி திணைக்கள புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளை நகரின் பல்வேறு இடங்களிலும் ஆரம்பித்து கொண்டிருந்த தருணம், குறித்த துயரச் சம்பவம் தொடர்பில் அறிந்ததும் உடனடியாக களத்திற்கு விரைந்ததுடன் வைத்தியசாலை, சம்பவம் இடம்பெற்ற தேவாலயம், மாவட்ட செயலகம், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் என்பவற்றுக்கு சென்று தேவையான துரித ஏற்பாடுகளை செய்வதற்கான பங்களிப்புக்களை வழங்கியிருந்தோம்.

அத்தோடு பாதுகாப்பு மற்றும் அரச உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் இதர விடயங்கள் தொடர்பில் துரிதகரமான தனது பங்களிப்பை மேற்கொண்டார்கள்.

அத்துடன் அடுத்த நாளும் வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், இறுதிக்கிரியை நிகழ்வுகளிலும் பங்கேற்றார்கள்.

அத்துடன் பிரதேசத்தின் அமைதி சிதைந்து விடக்கூடாது என்பதற்காக மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் மற்றும் ஏனைய மதத்தலைவர்களோடும், பிரதேச அரசியல் பிரதிநிதிகளோடும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், இன்று வரையும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் சார் விடயங்களை முன் கொண்டு வரும் ஒருவர் அத்துடன் குறித்த குண்டு வெடிப்பினால் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை மிக துரிதமாக புனரமைப்பதற்கான நகர்வுகளை பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் வலியுறுத்தி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா.

நாட்டின் இறையாண்மைக்கும், இன ஒற்றுமைக்கும், அமைதிக்கும் குந்தகம் ஏற்படக்கூடிய வகையிலான செயற்பாடுகளை ஒருபோதுமே கொண்டிராத ஒருவராக அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா உள்ளார்.

ஒரு காலத்தில் சகோதரப் படுகொலைகளை தடுத்து மாவட்டத்தில் இரத்த ஆறு ஓடுவதை தடுக்க வேண்டும் என செயற்பட்டு தனது பதவியையும் உயிரையும் துச்சமாக மதித்து இந்த நாட்டிற்காகவும், அமைதிக்காகவும் இவர் செய்த தியாயங்களுக்கு முழு உலகுமே என்றும் சான்று பகரும்.

அமைதியையும், சமாதானத்தையும் சமத்துவத்தையும் அதிகம் நேசிக்கும் இராஜாங்க அமைச்சர் ஒரு போதும் அரசியலுக்காக இன மத பேதம் பார்த்து செயலாற்றிய, அதற்காக இனவாத கருத்துக்களை மக்கள் மத்தியிலே விதைத்த வரலாற்றை கொண்டவர் கிடையாது.

அனைத்து இன மக்களையும் சமமாகவும் , சகோதர வாஞ்சையுடன் அரவணைத்து பிரதேசத்தின் அமைதிக்கும் சக வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்து வரும் ஒருவர்.

இந்நிலையில் இன மத பிரதேசவாதம் கடந்து மாவட்டத்தில் செயலாற்றுகின்ற ஒரு மக்கள் பிரதிநிதிக்கு இவ்வாறான பொய்யான செய்திகள் மூலமாக அபகீர்த்தியை ஏற்படுத்தி விடலாம், அவரை மக்களை விட்டும் தூரப்படுத்தி விடலாம் என கங்கணம் கட்டிக் கொண்டு குறித்த ஊடகங்கள் செயற்படுவது முட்டாள்தனமானதும் பிழையானதுமாகும்.

குறித்த சம்பவம் தொடர்பில் துரிதகரமான புலனாய்வு விசாரணைகள் பாதுகாப்பு தரப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை குழப்பும் விதமாக இவ்வாறான இணையத்தளங்களின் மூலமாக வெளியிடப்படுகின்ற விசமித்தனமான செய்திகளுக்காக இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு சார்பில் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்குடா ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா அமைப்பின் கண்டனம்

கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை கல்குடா ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஸஹ்ரான் என்பவருக்கும் எங்கள் அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முஹம்மத் (காஸிமி) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மீராவோடை தாருஸலாம் பள்ளிவாசலில் நேற்றிரவு கல்குடா ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும் குறிப்பிட்ட சில இணையதளங்களில் வெளியான போலியான வதந்திகளைப் பரப்புவதற்கெதிராகவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.

ஸஹ்ரான் என்பவருக்கும் எங்கள் அமைப்புக்கும் எந்தவித தொடர்புகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கிடையாது. அவரைப்பற்றி ஊடகங்கள் வாயிலாகத்தான் நாங்களும் அறிந்து கொண்டுள்ளோம் எங்கள் அமைப்பிற்கும் அவரது அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

இப்பயங்கரவாதத் தாக்குதல் குறித்து முழு இலங்கை முஸ்லிம்களும் மிகவும் கவலையுற்று, வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இவ்வேளையில் எம்முடன் விரோதம் கொண்ட சிலர் இப்பயங்கரவாதச் செயலுடன் எம்மைச் சம்பந்தப்படுத்திப் பேசியும் எழுதியும் வருவதுடன் இன்றைய தினம் இணைய தளங்களில் புகைப்படங்களைப் பிரசுரித்து, நாம் குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அரசினால் தேடப்பட்டு வரும் தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தி நாம் தலைமறைவாக இருந்து வருவதாகவும், தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் தெரியப்படுத்துமாறும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

சிலர் சமூக வலையத்தளங்களிலும் இவற்றைப் பரப்பி வருகின்றனர்.

ஊடகங்கள் மிகுந்த சமூகப் பொறுப்புடனும் ஊடக தர்மத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒரு சிலரின் விருப்பு, வெறுப்புக்களையும், காழ்ப்புணர்வுகளையும் வெளிக்கொணரும் தளமாக ஊடகங்களைப் பயன்படுத்துவது மிகவும் அநீதியாகும்.

இந்த வகையில் பொய்யான செய்திகளைப் பரப்பி வரும் இணையத்தளங்களை நாம் கண்டிக்கின்றோம்.

இந்த ஊடகங்கள் ஊடக தர்மங்களை கற்றுப் பணியாற்ற வேண்டும், பொய்யான தகவல்களைப் பரப்புதல் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளை இந்த ஊடகங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இத்தகைய ஊடகங்களுக்கெதிராகவும் இவற்றுக்குப் போலியான செய்திகளை அனுப்பி வைத்து குளிர்காயும் செய்தியாளர்களான சமூக விரோதிகளுக்கெதிராகவும் இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் கல்குடா ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா கேட்டுக் கொள்கின்றது.

வணக்க ஸ்தலங்களில் தாக்குதல் மேற்கொள்வதும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் போன்றோரை யுத்தத்தில் கூட தாக்குவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதும் மனித நேயத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரானதுமான செயற்பாடுகளாகும்.

இத்தாக்குதலில் மரணித்த உறவுகளின் குடும்பங்களுக்கு இலங்கை முஸ்லிம்களின் சார்பில் ஆறுதல் கூறுவதுடன் இத்தகைய தீவிரவாத சிந்தனைகள் இஸ்லாத்தில் மிகவும் கண்டிக்கத்தக்கது.

கடந்த காலங்களில் இத்தகைய தீவிரவாத சிந்தனை கொண்டோரின் கொள்கைகளை நாம் வன்மையாக கண்டித்துள்ளோம்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதக் கொள்கையை நாம் பகிரங்க சொற்பொழிவுகள் மூலமும் மாநாடுகள் மூலமும் வெள்ளிக்கிழமை கொத்பா பிரசங்கங்கள் மூலமும் தெளிவுபடுத்தி வந்துள்ளோம்.

குறிப்பாக கடந்த 03.11.2016ஆம் திகதி நிந்தவூரில் நடைபெற்ற பகிரங்க மார்க்கச் சொற்பொழிவிலும் இதே பிரதேசத்தில் நடந்த கிழக்கு மாகாண இஸ்லாமிய மாநாட்டிலும் மேலும் 2017.02.03ம் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் எதிர்ப்பு மாநாட்டிலும் இவர்களது கொள்கை குறித்து தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.

இத்தாக்குதல் தௌஹீத் எனும் இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையை கலங்கப்படுத்தும் நோக்கில் தொடர்புப்படுத்திப் பேசப்படுகின்றது. தௌஹீத் எனும் ஓரிரைக் கொள்கையை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றிருக்கின்றனர்.

தௌஹீத் கொள்கையை ஏற்றுக் கொண்டமுஸ்லிம்கள் அனைவரும் இத்தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றனர். அத்துடன் இத்தாக்குதலுடன் தொடர்புடைய குழுவினரை சரியாக அடையாளங்கண்டு உரிய தண்டனை வழங்க அனைவரும் ஒத்துழைக்குமாறும் வேண்டுகின்றோம்.

இப்பிரச்சினையை இலங்கையின் அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதையும் சில அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இந்நிகழ்வை சாதகமாக மாற்றிக் கொள்வதற்கு எத்தனிப்பதையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எனவே நமது நாட்டின் பாதுகாப்பு அபிவிருத்தி சகவாழ்வு என்பவற்றைக் கருத்திக் கொண்டு அனைவரும் இலங்கை பிரஜைகள் என்ற நோக்கில் பொறுப்புடன் செயற்படுமாறு வேண்டுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களிற்கு எதிராக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு

நாட்டில் இடம்பெற்ற குண்டு சம்பவத்தில் எனக்கு தொடர்பு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன் என ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மீராவோடை தாருஸலாம் பள்ளிவாசலில் நேற்றிரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

இப்பயங்கரவாதத் தாக்குதல் குறித்து முழு இலங்கை முஸ்லிம்களும் மிகவும் கவலையுற்று, வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எம்முடன் விரோதம் கொண்ட சிலர் இப்பயங்கரவாதச் செயலுடன் என்னை சம்பந்தப்படுத்திப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

அந்தவகையில் இணையதளங்களிலும் எனது புகைப்படங்களைப் பிரசுரித்து நான் குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டு அரசினால் தேடப்பட்டு வரும் தீவிரவாதி என அடையாளப்படுத்தியும், நான் தலைமறைவாக இருந்து வருவதாகவும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் தெரியப்படுத்துமாறும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் மக்கள் பிரதிநிதியாக ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளராக ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து கொண்டு சேவையாற்றி வருகின்றேன்.

ஆனால் என்மீது அபாண்டமான பொய்யை சுமத்தி சமூக வலைத்தளங்களில் செய்தியாக பிரசுரித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக இணையதளங்களுக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன். எனது அரசியல் நடவடிக்கைகளை குழப்பி என்னை அரசியலில் இருந்து ஒதுங்க வைக்கும் நோக்கில் நாசகார விசமீகள் என்மீது அபாண்டமான பழிகளை சுமத்தி வருகின்றனர்.

இத்தாக்குதலானது மனித நேயத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரானதுமான செயற்பாடுகளாகும்.

இத்தாக்குதலில் மரணித்த உறவுகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதுடன், இத்தகைய தீவிரவாத சிந்தனைகள் மிகவும் கண்டிக்கத்தக்கதுடன், தீவிரவாத சிந்தனை கொண்டோரின் கொள்கைகளை வன்மையாக கண்டிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.