யாழில் அதிகாலை தொடக்கம் பாரிய சுற்றிவளைப்பு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ். கொக்குவில் தலையாழி பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இருந்து பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள் எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டை விட்டு வீதியில் இறங்கவோ இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வீடு வீடாக நுழைந்து வீட்டில் இருப்பவர்கள் தொடர்பில் பதிவுகள் எடுக்கப்பட்டதோடு வீடுகளும் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டன.

அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தபட்ட வீடுகள் இராணுவத்தினரால் சிறிய சுவரொட்டி ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் முப்படைகளும் களம் இறக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட நிலையில் யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

மேலும் இந்த சுற்றிவளைப்பு ஆவா குழுவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.