சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த மற்றுமொருவர் மரணம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் இன்று காலை 9.50 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 29ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கே.கணேசலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிசிச்சை பிரிவில் சிசிச்சை பெற்றுவந்த மட்டக்களப்பு இருதயபுரத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் பிரஸ்தீன் (வயது-27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இவர் கடந்த மாதம் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 12 நாட்கள் சிசிச்சை அளிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விவசாய விஞ்ஞானப் பட்டத்தை பூர்த்தி செய்து அரசாங்க வேலைக்காக காத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது தாயும் குறித்த சம்பவத்தில் காயப்பட்டு சிசிச்சையளிக்கப்பட்ட பின்பு கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பிய நிலையிலே மகன் உயிரிழந்துள்ளார்.