தடுப்புக்காவல் கட்டளையினை தளர்த்தி அஜந்தனை விடுதலை செய்யக் கோரி இரா.சம்பந்தன் வேண்டுகோள்!

Report Print Navoj in சமூகம்

வவுணதீவுப் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் எனும் அஜந்தனை விடுதலை செய்யக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சந்தேக நபரை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்காமல் உரிய கட்டளைகளை மீளப் பெற்று விடுதலை செய்யுமாறு அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கடந்த 2018.11.30ம் திகதி வவுணதீவுப் பிரதேசத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனுடன் தொடர்புபடுத்தி கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் எனும் அஜந்தன் என்பவரை தடுப்புக் கட்டளை மூலம் கைது செய்து இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளின் போது வவுணதீவுப் பொலிஸாரின் படுகொலைக்கும், அஜந்தனுக்கும் தொடர்புகள் இல்லை எனவும், அக்கொலையினைச் செய்தவர்கள் வேறு நபர்கள் எனவும் தெரியவந்துள்ளதாக அறிகின்றேன்.

எனவே இத்தகவல்கள் சரியெனில் சந்தேகத்தின் பெயரில் இத்தனை மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அஜந்தன் என்பவரைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்காமல் உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு அவரை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.