நீர்கொழும்பில் உள்ள 169 வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் தங்க வைக்க நடவடிக்கை

Report Print Thileepan Thileepan in சமூகம்
657Shares

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து அகதி அந்தஸ்து கோரிய நிலையில் நீர்கொழும்பில் உள்ள வெளிநாட்டு பிரஜைகளில் 169 பேரை வவுனியாவில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன வவுனியாவிற்கு விஜயம் செய்து இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து அகதி அந்தஸ்து கோரிய நிலையில் நீர்கொழும்பில் வசித்து வந்த பாகிஸ்தான், மியன்மார், சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 வரையிலான அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனையடுத்து அந்த மக்களை வேறு பகுதிகளில் தங்க வைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்தானிகராலயம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதற்கமைவாக வெளிநாட்டு பிரஜைகள் 700 பேரில் 169 பேரை வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள வட மாகாணத்திற்குரிய பலநோக்கு கூட்டுறவுச் சங்க பயிற்சிப் பாடசாலையில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் திலக்மாரப்பன வவுனியாவிற்கு விஜயம் செய்து தங்க வைப்பாதற்காக தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டதுடன், மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

வவுனியா அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் திலக்மாரப்பன, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் அதிகாரிகள், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் து.நடராஜசிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பொலிஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன், மூடிய அறைக்குள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.