தலைமன்னார் கடற்பரப்பில் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு காப்புறுதி பணம் வழங்கி வைப்பு

Report Print Ashik in சமூகம்

தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த வருடம் திடீர் அனர்த்தத்தின் போது உயிரிழந்த மீனவர் ஒருவரின் குடும்பத்திற்கு இன்று 10 இலட்சம் ரூபாய் காப்புறுதி பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை தலைமன்னார் பியர் கிராம அபிவிருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் குடும்பத்திற்கே குறித்த காப்புறுதி தொகையாக 10 இலட்சம் ரூபாவிற்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களமும், தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியமும் இணைந்து மீனவர்களுக்கான காப்புறுதி திட்டத்தை ஊக்குவிக்கும் செயல் பாடாக கடந்த வருடம் தலைமன்னார் ஊர்மனை கிராமத்தைச் சேர்ந்த இரு சகோதர மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் காணாமல் போய் புங்குடுதீவில் சடலமாக கரை ஒதுங்கிய நிலையில் மீனவர் ஒருவர் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.

இதன் போது தோமஸ் மில்டன் என்பவருடைய குடும்பத்திற்கு இலவச காப்புறுதி திட்டத்தின் ஊடாக சுமார் 10 இலட்சம் ரூபாய் இன்று காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த 10 இலட்சம் ரூபாவில் 5 இலட்சம் குறித்த மீனவரின் மனைவிக்கும், மீதம் 5 இலட்சம் ரூபாய் இரு பிள்ளைகளுக்கும் தலா இரண்டரை இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர்.ஏ.ஏ. விக்கிரம சிங்க , உத்தியோகத்தர்கள், தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜோசப் சீராளன் நாயனார் , மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம். சாகிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.