சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதுகாப்பு சம்பந்தமாக உறுதிப்படுத்தப்படாத இரகசிய தகவல் ஒன்றை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் மனித வளம் மற்றும் சுற்றாடல் முகாமைத்துவ பணிப்பாளர் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த கடிதத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாகவே பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த பெண் கடிதத்தை புகைப்படமாக எடுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை தலதா ஹெல பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண் வேறு நிறுவனத்தின் ஊடாக சுற்றுலா அதிகார சபையில் சேவைக்கு அமர்த்தப்பட்டவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் இந்த பெண் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.