தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட காலம் எடுக்கலாம்

Report Print Rusath in சமூகம்

தற்போது நெருக்கடியாகவுள்ள தீவிரவாத அச்சுறுத்திலில் இருந்து இயல்பு நிலைக்குத் நாடு திரும்ப நீண்ட காலமெடுக்கலாம் என இலங்கை இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி பிரகேடியர் அஷாத் இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூக ஆர்வலர்கள் பங்குபற்றிய கூட்டத்தில் அவர் சமகால நெருக்கடி நிலை குறித்து விளக்கினார்.

ஏறாவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் ஊர்ப்பிரமுகர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், மௌலவிமார், சமூக ஆர்வலர்கள், உட்பட இராணுவ உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அங்கு பிரசன்னமாகியிருந்தோர் முன்னிலையில் தொடர்ந்து சமகால நெருக்கடி நிலையில் பொது மக்களும் சமூகத் தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டிய விதம்பற்றி அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல் நாட்டிலுள்ள அனைவரையும் பாதித்துள்ளது. இலங்கை முஸ்லிம் சமூகம் இலங்கை வரலாற்றில் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நாட்டுக்குச் சேவைகள் செய்து வந்திருப்பதை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது.

பண்டைய அரசர்கள் தொடக்கம் கடந்த 30 வருடங்களாக நடந்து முடிந்த யுத்தத்திலும் இலங்கை முஸ்லிம்கள் அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்க்கின்றார்கள். எனினும் தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு கறுப்புப் புள்ளி ஏற்பட்டு விட்டது.

முஸ்லிம்கள் அவர்கள் இந்த நாட்டில் எல்லா சமூகத்தாருக்குமிடையில் கலாசாரம், மொழி, பண்பாட்டு, பொருளாதாரம், அறிவு ரீதியாக இணைப்புப் பாலமாக இருந்திருக்கின்றார்கள்.

தற்போது நம்பிக்கை இழந்தவர்களாக உள்ள முஸ்லிம் சமூகம் மீண்டும் இழந்து விட்ட நம்பிக்கைகயைக் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும்.

தீவிரதவாதம் இத்தோடு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்குள்ளிருந்தே இந்தத் தீவிரவாதம் திசை திருப்பப்பட்டதால் அதனை முறியடிப்பதற்கு முஸ்லிம் சமூகம் ஒட்டு மொத்தமாக அணி திரண்டு உதவ வேண்டும்.

இலங்கை இராணுவமாகிய நாங்களும் இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றோம். தீவிரவாதிகள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் இவ்வாறு குழுக்கள் சமூகத்தின் குழுக்களாக இயங்கலாம் அதற்கு நாம் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இருக்க வேண்டும்.

தீவிரவாதிகளாக இயங்குவதற்கு இடமளிக்கக் கூடாது. அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டி வேலைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களின் செயற்பாடு அடுத்த சமூகத்தாருக்கு ஒரு அசௌகரியமாக இருக்கக் கூடாது.

நாம் சிறுபான்மை என்பதால் எமக்குள்ள பொறுப்புக்கள் அதிகம். அடுத்த சமூகத்தினருடன் வாழ்வதற்கு நாம் பயிற்சி பெற வேண்டும். மத்ரசா மாணவர்கள் சமூகமயப்படுத்தப்பட வேண்டும்.

தீவிரவாதத் தாக்குலுக்குரிய பொறுப்பை முஸ்லிம் சமூகமே ஏற்றுக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய வாழ்வை சரியாக அறிந்து புரிந்து வாழத் தெரியாதவர்கள் தான் தீவிரவாதத்தை நாடுகிறார்கள்.

கற்றுக் கொண்ட பாடத்தினூடாக எதிர்காலத்தை இலங்கையில் வாழும் அனைத்து சமூகத்தாருடன் இணைந்து சிறந்த முறையில் வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மார்க்க அடிப்படையிலும் கட்சி அடிப்படையிலும் பல பிரிவுகளாகப் பிரிந்து ஒற்றுமை இல்லாமல் போய் சிதைவுபட்டதனால்தான் இத்தகைய தீவிரவாத உணர்வுகள் வலுப்பெற்று அவை அழிவை ஏற்படுத்தகின்றன.

இந்த நாட்டில் முஸ்லிம்களின் வாழ்வு எவ்வளவு முக்கியத்தவம் பெறுகிறதோ அதேபோலத்தான் மற்றயைவர்ளின் வாழ்வும் முக்கியத்துவமானது எனவும் தெரிவித்துள்ளார்.