நாட்டில் 1983ம் ஆண்டு ஜூலை கலவரம் தமிழ் மக்களின் மனதிலிருந்து இன்னும் விலகவில்லை. அதேபோன்று அதனை தொடர்ந்து இடம்பெற்ற விடுதலை புலிகளின் யுத்த நடவடிக்கையும் மக்களின் மனதிலிருந்து விலகவில்லை.
இந்த நிலையில் ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் இன்று மக்களுக்கு புதிய அனுபவத்தை உருவாக்கியுள்ள என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கலந்துரையாடல் ஹட்டனில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் இடம்பெற்ற பாதிப்புகள் அனைத்திலும் இனம் என்ற வகையில் நாட்டின் ஒவ்வொரு இனத்தவரும், ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகையால் இந்த நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதத்திற்கு மக்களை அனுபவப்படாமல் இருக்க நாட்டு மக்களின் பாதுகாப்பில் அனைத்து இன மக்களும் உறுதிப்பூண்டு செயல்பட வேண்டும்.
கடைசியாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாடுகளில் முஸ்லிம் மதத்தவர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் இந்த நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக முடியாது.
முஸ்லிம் சமூகத்தின் மீது சந்தேகம் கொண்டு செயற்படுவதை தவிர்த்துக் கொள்ளும் அதே நிலையில் இந்த நாட்டு முஸ்லிம்கள் நாட்டின் மீது வைத்துள்ள பற்றின் ஊடாக கொடுக்கப்பட்டு வரும் தகவல் சம்பந்தமாக நுவரெலியா பிளக்பூல் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் இத் தீவிரவாத இயக்கத்துடன் சம்மந்தப்பட்ட முக்கிய நபர்களை கைது செய்ய கூடியதாகவும், பாதுகாப்பு தரப்பினர் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடியதாகவும் இருக்கின்றது.
அதே நேரத்தில் இந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து நாடு அசாதாரண சூழ்நிலைக்கு சென்றுள்ள இந்த நிலையில் நாட்டின் மலையக பிரதேச மக்களையும் அவர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மலையக மக்களின் அமைச்சர் என்ற வகையில் முதன் முறையாக நுவரெலியா மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்.
இதன் முதன் நடவடிக்கையாக ஹட்டனில் இன்று பாதுகாப்பு சம்பந்தமான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த நாட்டை மிக விரைவில் பாதுகாக்க கூடிய வகையில் துரிதமாக செயல்பட்டும், செயல்படுகின்ற புலனாய்வு பிரிவினர், பாதுகாப்பு படையினர் ஆகியோர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
அதேவேளை, பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பொது மக்களும் பின் தங்காது சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நடமாட்டங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதுடன், சந்தேகத்திற்கிடமான எந்தவோர் நடவடிக்கை ஆனாலும் அச்சமின்றி அவ்வப்பகுதி பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் வழங்க முன்வர வேண்டுதெனவும் இதன்போது வலியுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.