தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினால் காத்தான்குடியில் பல்வேறு அச்சறுத்தல்கள்!

Report Print Kumar in சமூகம்
911Shares

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளையும் சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு சார்பான கருத்துகளையும் சஹ்ரான் தெரிவித்து வந்தது தொடர்பில் நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்திருந்ததாக அப்துல் ஜமாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் செயலாளர் கே.ஆர்.எம்.சஹ்லான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - காத்தான்குடியில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஒரு சில முஸ்லிம்கள் செய்தி இந்த தாக்குதல்கள் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் சந்தேகம் கொண்டு பார்க்கவேண்டாம். இந்த நாட்டில் முஸ்லிம்கள் என்றும் வன்முறைகளை ஆதரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு ஊடாக காத்தான்குடியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியதுடன் தமக்கும் பல்வேறு அச்சறுத்தல்களையும் விடுத்துவந்துள்ளது.

இஸ்லாமிய போதனைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வன்முறைகளைத் தூண்டுவதாகவோ மற்றையவர்களின் சமய, சமூக உரிமைகளைப் பாதிப்பதாகவோ, ஆதிக்கம் செலுத்துவதாகவோ அமையவில்லை.

எனினும் பிற்காலத்தில் தோன்றிய இஸ்லாமிய பெயர் தாங்கிய சில இயக்கங்களின் அடிப்படைவாதப் போக்குகள் காரணமாக இதற்கு மாற்றமாக சமய, சமூக வேறுபாடுகள், இன அடிப்படை வாதம் என்பன தோற்றுவிக்கப்பட்டு இஸ்லாமிய சமாதான தத்துவங்களுக்கு உலகளாவிய ரீதியில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் எல்லா சமூகங்களுடனும் இணைந்து அமைதியை விரும்பும் ஒரு சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே நாட்டின் சுதந்திரத்திற்காக முஸ்லிம்கள் குரல் கொடுத்துள்ளனர்.

அரசின் பல்வேறு துறைகளிலும் பதவிகளை வகித்து நாட்டுக்காக பணியாற்றியுள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்புச் செய்துள்ளனர். நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க பல அர்ப்பணிப்புகளை செய்துள்ளனர்.

நாட்டில் 30 வருடகாலம் இடம் பெற்ற யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் முஸ்லிம்கள் பல உயிர் இழப்புக்களையும் பொருளாதார இழப்புக்களையும் சந்தித்த போதும் பூர்வீக வாழ்விடங்களை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போதும் ஆயுத கலாசாரத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை.

இத்தாக்குதல் சம்பவங்களின் சூத்திரதாரிகள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனாலும் பிரதான சூத்திரதாரி காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் என்பதனாலும் நாடு முழுவதிலும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம் மக்கள் மீதும் ஒரு சந்தேகப் பார்வை தோன்றியுள்ளது.

நாம் இந்நாட்டு முஸ்லிம்கள் என்ற வகையில் இது தொடர்பாக சில விபரங்களை முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.

இத்தாக்குதல் சம்பவங்களில் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் என்பவர் 2011ஆம் ஆண்டு தேசிய தௌஹீத் ஜமாத் எனும் அமைப்பை உருவாக்கினார்.

இவர் முஸ்லிம்கள் மத்தியிலும் ஏனைய சமூகங்கள் மத்தியிலும் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலும் வன்முறைகளை தூண்டும் வகையிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன் இலங்கை நாட்டிற்கு எதிராகவும் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ் இற்கு ஆதரவாகவும் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

இவரது தேசவிரோத தீவிரவாத செயற்பாடுகளை கண்டித்து காத்தான்குடி முஸ்லிம் மக்கள் சார்பில் 13.03.2017ஆம் திகதி காத்தான்குடியில் நாம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினோம்.

இதன்போது சஹ்ரானை கைது செய்யுமாறும் தேசிய தௌஹீத் ஜமாத்தை தடைசெய்யுமாறும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கைகள் விடுத்தோம்.

அது தொடர்பான மகஜர் ஒன்றை காத்தான்குடி பிரதேச செயலாளருக்கும், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் கையளித்தோம்.

இதன் பின்னர் 27.03.2017ம் திகதி தேசிய தௌஹீத் ஜமாத்தினதும் சஹ்றான் என்பவரினதும் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடு ஒன்றை இலங்கை நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், உயர் நீதிமன்ற நீதியரசர், நீதித்துறை அமைச்சர், சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க

அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், நீதிச் சேவை ஆணைக்குழு, பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி அனைவரிடமும் நாம் காத்தான்குடி முஸ்லிம் மக்கள் சார்பில் கையளித்தோம்.

இவர்களுக்கு எதிராக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் எமது நாட்டினதும், முஸ்லிம் சமூகத்தினதும் எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு தூரநோக்குடன் சிந்தித்து நாம் மேற்கொண்டவைகளாகும்.

இவர்களது செயற்பாடுகள் காத்தான்குடியிலும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களிலும் முஸ்லிம்களிடையேயும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மக்கள் மத்தியிலும் மதக்கலவரத்தை ஏற்படுத்தும்” என நாம் அச்சமடைந்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.