தொடர்ந்தும் தமிழ் மக்கள் நசுக்கப்படுவதற்கு அரசின் மெத்தனப்போக்குகளே காரணம்

Report Print Nesan Nesan in சமூகம்

தொடர்ந்தும் தமிழ் மக்கள் நசுக்கப்படுவதற்கு அரசின் மெத்தனப்போக்குகளே காரணம் என நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் சபையிலே ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் 15வது கூட்டத்தொடர் தவிசாளர் கலையரசன் தலைமையில் சபா மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிர்த்த ஞாயிறு அன்று தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டியும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெறவும் இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய பிரதேசசபையின் உறுப்பினர் அந்தோனி சுதர்ஷன் கருத்து தெரிவிக்கையில்,

எமது நாட்டிடை ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடார்த்த தேர்ந்தெடுக்க காரணம் இந்த அரசின் மெத்தனப் போக்கும், அரசியல் உறுதியற்ற நிலையுமே காரணம். இந்த நிலை தொடருமானால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகும்.

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நிலை முஸ்லிம்களின் பள்ளிவாசலிலோ அல்லது பௌத்த மக்களுடைய விகாரையிலோ ஏற்பட்டிருந்தால் இந்த நாடு இரத்தக்களரியாக மாறியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதன்போது தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றமைக்கு அரசியல் தலைவர்களே முக்கிய காரணம். அவர்களின் அதிகார போட்டியின் காரணமாக நாட்டின் பாதுகாப்பு விடயங்களின் கவனம் செலுத்த தவறியுள்ளனர்.

புகைப்படமொன்றை வைத்திருந்தன் பெயரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை கைது செய்துள்ளமை அரசின் கோழைத்தனமான செயற்பாடுகளையே வெளிப்படுத்துகின்றது.

தடைசெய்யப்பட்ட குழுவான ஜே.வி.பியின் தலைவர் ரோஹண விஜயவீர போன்ற தலைவர்களின் பிறந்த தினத்தில் படங்கள் பதாகைகளை வைத்து கொண்டாடுவதை பார்த்துக்கொண்டிருக்கும் அரசும் படையினரும் தமிழ் மக்களையே நசுக்குவதில் குறியாக இருக்கின்றது.

மேலும் நாவிதன்வெளி பிரதேசத்தில் இருந்து நிலங்களை வாங்கி பண்ணைகள் அமைத்துள்ள இடங்களை இராணுவத்தினரின் துணையோடு சோதனையிட்டு பிரதேசவாழ் மக்களின் அச்சநிலையை தீர்கவேண்டிய கடமைப்பாடு பிரதேச அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது.

இதன்போது வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்று பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.