கூட்டுறவு பயிற்சி கல்லூரியை அகதி முகாமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது: ப.சத்தியலிங்கம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் அமைந்துள்ள கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியை அகதி முகாமாக மாற்ற அனுமதிக்க முடியாது என வடமாகாண சுகாதார முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று மாலை ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

வவுனியாவிற்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து வேறு நாடுகளுக்கு செல்வதற்காக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஸ்தாபனத்தில் பதிவுகளை மேற்கொண்டு காத்திருப்போர் நீர்கொழும்பில் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அவர்கள் வசித்த வீட்டில் இருந்து வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்றியிருப்பதனால் அவர்கள் தற்போது நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தங்கியிருப்பதால் அவர்களை தற்காலிகமாக வெவ்வேறு பகுதிகளில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் வவுனியாவில் தற்போது புனர்வாழ்வு நிலையமாக இயங்கி வரும் கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் 169 பேரை குறுகிய காலம் தங்க வைப்பதற்கு திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, நாம் அவரிடம் கூட்டுறவு பயிற்சி கல்லூரி என்பது வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவு உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியில் நடத்துவற்கான ஒரே ஒரு பயற்சி கல்லூரியாகும்.

இதனை ஏற்கனவே 2009ஆம் ஆண்டு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதாக வைத்துள்ளனர்.

10 வருடங்களாக இவ்வாறு உள்ளது. இது மாகாணசபைக்குரிய கட்டிடம் எனவே இதனை எந்த தாமதமும் இன்றி எம்மிடம் ஒப்படைக்க வேண்டும்.

தற்போது அங்கு மீண்டும் அகதிகளை கொண்டு வந்து தங்க வைத்து கட்டிடத்தினை கையளிப்பதில் காலதாமதம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளோம்.

இதனை அரசாங்கம் கவனத்தில் கொண்டு செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.