மன்னார் மற்றும் மாந்தை புதைகுழி வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் - திருக்கேதீஸ்வரம், மாந்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி மற்றும் மன்னார் நகர மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி ஆகியவற்றின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதிமன்றத்தில் இன்று குறித்த இரு வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், இன்றைய தினம் மன்னார் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா நீதிமன்றுக்கு சமூகம் அளிக்காத காரணத்தினால் பதில் நீதவான் இ. கயஸ் பெல்டானோ தலைமையில் குறித்த இரு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதவான் குறித்த இரு வழக்கு விசாரணைகளையும் எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தார்.

இன்றைய தினம் மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கை சமர்பிப்பு தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட போதிலும் எந்தவித சமர்பிப்புக்களும் இடம் பெறவில்லை.

அதே நேரத்தில் திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு தொடர்பாகவும் எதுவித முன்வைப்புக்களும் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.