புலம் பெயர்ந்தவர்களின் கையாடல்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ளது! ஜனநாயக போராளிகள் கட்சி குற்றச்சாட்டு

Report Print Theesan in சமூகம்

அரசியல் கட்சிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் கையாடல்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ளமை மறுக்க முடியாத உண்மை என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைய அடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாம் தெளிவாக ஓர் விடயத்தினை சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.

அதாவது நீங்கள் இந்த மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமாக இருந்தால் உண்மையாகவே தமிழ் மக்களை நேசிப்பவர்களாக இருந்தால் மிகச்சிறப்பாக கற்று பட்டங்களை பெற்று சமூகத்திற்குள் வந்து சிறப்பாக சேவையாற்றுங்கள்.

அண்மைக்காலமாக சில அரசியல்கட்சிகளின் பின்புலம் அல்லது வெளிநாடுகளில் இடம்பெயர்ந்திருக்கின்ற சிலரின் கையாடல்களுக்குள் யாழ்.பல்கலைக்கழகம் கையாளப்பட்டுள்ளது. அது மறுக்கமுடியாத உண்மை.

ஆகவே இந்த இரு மாணவர்களும் இந்த வழக்குகளில் இருந்து விரைவில் விடுபட்டு பல்கலைக்கழகத்திற்கு திரும்பி கற்றல் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.

பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள் யாரும் தீவிர அரசியலில் ஈடுபடவேண்டுமாக இருந்தால் பல்கலைக்கழத்தினை விட்டு வெளியில் வந்து தமிழர்கள் மத்தியில் இன்று பல கட்சிகள் உள்ளது அவற்றில் ஒன்றில் இணைந்து உங்கள் அரசியல் வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளலாம்.

பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் செயற்படும் விதம் அங்கு கற்றுக்கொண்டிருக்கின்ற ஏனைய மாணவர்களையும் பாதிக்கும். இந்த இடத்தில் சில உண்மைகளை நாங்கள் உணரவேண்டும்.

பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள் அங்கு நீங்கள் சிறப்பு தேர்ச்சி பெற்று சமூகத்திற்குள் வந்து சேவையாற்றுங்கள் என்பதனை மீளவும் தெரிவிக்கின்றேன்.

நீங்கள் பல்கலைக்கழகத்தில் கற்கும்போது மிகப்பெரும் போராட்டம் ஆர்ப்பாட்டங்களை செய்து விட்டு வெளியில் வந்து எந்த போராட்டத்திற்கோ ஆர்ப்பாட்டத்திற்கோ உங்களை காணமுடிவதில்லை.

ஆகவே உங்கள் பெற்றோர், உறவினர்களுக்காக கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் உங்களுக்காக படும் கஸ்டங்களை பாருங்கள்.

நாங்கள் மிகப்பெரும் கொடிய யுத்தத்தினை சந்தித்து வந்துள்ளோம். ஆகவே கல்வியால் எங்கள் சமூகம் மேலெழும்பவேண்டும்.

இந்த நிலையில் இந்த மாணவர்களது விடுதலை தொடர்பில் அரசியல் ரீதியாக போராளிகள் என்ற வகையில் நாம் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.