வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

நீர்கொழும்பில் உள்ள வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கு பல்வேறு தரப்புக்களும் தமது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து அகதி, அந்தஸ்து கோரிய நிலையில் நீர்கொழும்பில் வசித்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 வரையிலான அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனையடுத்து அந்த மக்களை வேறு பகுதிகளில் தங்க வைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதற்கமைவாக வெளிநாட்டு பிரஜைகள் 169 பேரை வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள வடமாகாணத்திற்குரிய பலநோக்கு கூட்டுறவுச் சங்க பயிற்சிப் பாடசாலையில் இயங்கி வரும் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன கடந்த புதன்கிழமை வவுனியாவிற்கு விஜயம் செய்து தங்க வைப்பாதற்காக தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டதுடன், மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது தற்காலிகமாகவே அவர்கள் குறுகிய காலத்திற்கு தங்க வைக்கப்படுவார்கள் என அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என்பன இவ்வாறு வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டம் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்னும் மூன்று இனங்களைச் சேர்ந்த நான்கு மதங்களைப் பின்பற்றும் பல்லின சமூகம் வாழும் பகுதியாகும்.

இங்கு ஏற்கனவே மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம், காணிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வரும் நிலையில் புதிதாக அகதிகளை கொண்டு வந்து தங்க வைப்பதன் மூலம் சமூக ரீதியாக மேலும் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து எதிர்த்து வருகின்றனர்.

அத்துடன், தங்க வைப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட இடம் கூட்டுறவு பயிற்சிக் கல்லூரி ஆகும். கூட்டுறவு பயிற்சி கல்லூரி என்பது வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவு உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியில் நடத்துவற்கான ஒரே ஒரு பயற்சி கல்லூரியாகும்.

இதனை ஏற்கனவே 2009ஆம் ஆண்டு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதாக வைத்துள்ளனர்.

10 வருடங்களாக இவ்வாறு உள்ளது. இது மாகாணசபைக்குரிய கட்டிடம் எனவே இதனை எந்த தாமதமும் இன்றி எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி வரும் நிலையில் அதில் அகதிகளை தங்க வைப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.