எந்தவொரு தமிழ் இளைஞர்களுக்கும் இப்படி நடக்கக் கூடாது! ஜனாதிபதியால் விடுதலையான முன்னாள் போராளியின் உருக்கம்

Report Print Kumar in சமூகம்

எனக்கு நடந்தது போன்று இனி எவருக்கும் நடக்கக் கூடாது என்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தன் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்கள் நிலைமை இப்படியாகிவிடக் கூடாது என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

மக்களை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை விடுதலைப் புலிகள் முன்னெடுக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் கதிர்காமத்தம்பி இராசகுமாரன் எனப்படும் அஜந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் இன்று காலை விடுவிக்கப்பட்டார்.

ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கு அமைய இன்று காலை பதில் நீதவானின் இல்லத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொண்டு வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுதலையான அஜந்தன் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

எனது கைதால் எனது குடும்பம், எனது பிள்ளைகள் பாதிக்கப்பட்டு விட்டனர். அதனை சீர் செய்ய சில காலங்கள் செல்லும். இப்படியான துயர சம்பவங்கள் தமிழ் இளைஞர்களுக்கு நடந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

நாங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் நாங்கள் எமது குடும்பம், சமுகம் சார்ந்த பணிகளில் மட்டுமே ஈடுபடுகின்றோம். அரசாங்கத்திற்கு எதிராகவே வேறு சட்டமுறையற்ற செயற்பாடுகளிலோ நாங்கள் ஈடுபடமாட்டோம்.

எங்கள் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எங்களது இயல்பு வாழ்க்கையினை குழப்பும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு வேதனைகளுடன் வாழ்க்கைக்குள் காலடி வைத்து ஓரளவு இயல்பு நிலையினை அடைந்த போதிலும் மீண்டும் தனது வாழ்க்கை பூச்சியத்திற்குள்ள தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.