களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அனைத்து வைத்திய நிபுணர்களும் திடீர் இடமாற்றம்!

Report Print Rusath in சமூகம்

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த அனைத்து வைத்திய நிபுணர்களும் பதில் ஆட்கள் இன்றி இடமாற்றம் செய்வதற்காக சுகாதார அமைச்சி எடுத்துள்ள நடவடிக்கையானது எதிர்காலத்தில் வைத்திய சேவையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டு மக்கள் பாரிய சுகாதார பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும் என வைத்தியசாலை சமூகம் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேற்படி விடயம் தொடர்பாக வைத்தியசாலை சமூகத்தினர் கருத்து தெரிவிக்கையில்,

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த 3 வைத்திய நிபுணர்களும், வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக சுகாதார அமைச்சு அந்த அமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

பட்டிருப்பு தொகுதியில் ஒரு இலட்சத்தி இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அடிப்படை வசதிகளிலின்றி வறுமைக்கோட்டின் கீழே வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான மக்களை மையப்படுத்தியதாக அவர்களின் சுகாதார பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அமையப்பெற்றதே களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையாகும்.

வைத்திய தேவைகருதி இந்த வைத்தியசாலையை விடுத்து வேறு வைத்தியசாலை செல்ல வேண்டுமாக இருந்தால் பல கிலோ மீற்றர் தூரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கே செல்ல வேண்டும்.

இந்த நிலையினால் அப்பகுதி அதிக கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். சுகாதார சேவை என்பது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

இதனை செய்து கொடுக்க வேண்டிய தார்மீக கடமை அரசாங்கத்திற்கு உரியதாகும். நாங்கள் இந்த வைத்தியசாலையானது மிக விரைவாக முன்னேற்றம் காணும் என எதிர்பார்த்திருந்தோம்.

காரணம் இந்த நாட்டின் ஜனாதிபதி, தற்போதைய சுகாதார அமைச்சரும் இணைந்தே இந்த வைத்தியசாலையில் அமையப்பெற்ற புதிய கட்டிடத்தினை கடந்தவருடம் திறந்து வைத்தனர்.

வைத்தியசாலையின் நிலமையையும் நேரில் பார்வையிட்டு சென்றிருந்தனர். இதனால்தான் இந்த வைத்தியசாலையானது மென்மேலும் வளர்ச்சியடையும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.

எனவே குறித்த வைத்தியசாலைக்கு வைத்திய நிபுணர்களை நியமிப்பதற்காக சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் இது தொடர்பில் மாவட்டம் சார்ந்த பலதரப்பட்ட அரசியல்வாதிகளிடம் வைத்தியசாலை சமூகம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதவிடத்து அனைவரும் ஒன்றிணைந்து எமது கோரிக்கை நிறைவேறும் வரை வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலையேற்படும் என களுவாஞ்சிகுடி வைத்தியசாலைச் சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.