கல்முனை உவெஸ்லி பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு! பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்
226Shares

கல்முனை உவெஸ்லி உயர்தர கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளமை தொடர்பாக கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கல்முனை தேவாலய போதகர் எ.கிருபைராஜா, கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் இணைந்து நேற்று அம்பாறைக்கு சென்று கபில ஜெயசேகரவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். அம்மகஜரில்,

கல்முனை உவெஸ்லி கல்லூரியின் தென்பக்க பிரதான நுழைவாயிலுக்கு எதிர்ப்பக்கம் கல்முனை மாநகரசபையின் பிரதான சந்தை உள்ளது.

சந்தைக்கு வரும் பல வாகனங்கள் கல்லூரியின் தென்புற மதிலோடு நிறுத்தி வைக்கப்படுவதால், மாணவர்கள் அப்பக்கத்தால் வர அஞ்சுகின்றனர். அவை ஆபத்தாக அமையலாமென அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு அருகில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படக் கூடாது என்று அரசாங்கம் கடுமையாக கூறியிருக்கின்ற அதேவேளை கல்முனையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்விதம் பாடசாலையின் பாதுகாப்புக்கு இடைஞ்சலாக நிறுதத்தி வைக்கப்படுவது ஆபத்தாக அமையும் என பெற்றோர்கள் பல தடவைகள் முறையிட்டும் மாநகரசபையோ, கல்முனை பொலிஸோ நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 07ஆம் திகதி கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்திலும் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.

நடவடிக்கை எடுப்பதாக வந்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கூறிய போதிலும் அடுத்தடுத்த நாட்களில் வாகனங்கள் பாடசாலையோடு சேர்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் பாடசாலைக்கு மாணவர்கள் வருவது குறைந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் பாடசாலையை மூடவேண்டி வரலாம். எனவே வாகனங்களை வேறிடத்தில் நிறுத்தி பாடசாலையை ஆபத்தின்றி பயமின்றி நடத்த உதவுமாறு வேண்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு கபில ஜெயசேகர, நான் கல்முனை பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிடுகிறேன். நீங்கள் பயமில்லாமல் பாடசாலையை நடத்தலாம் என பதிலளித்துள்ளார்.

அதன்படி கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயநித்தி விகாரைக்கு சென்று வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரரைச் சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.