அவுஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முற்பட்ட மூவர் கைது

Report Print Kumar in சமூகம்

இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முற்பட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு, சவுக்கடி பகுதியில் இன்று காலை அடையாளந்தெரியாத நபர்களின் நடமாட்டத்தினை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனடிப்படையில், கலாவத்தை பகுதியை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் இருவரையும், வந்தாறுமூலையை சேர்ந்த ஒருவரையும் பயணப்பொருட்களுடன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஏனையவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும், அவர்களை கைதுசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களை ஏற்றிவந்ததாக கருதப்படும் முச்சக்கர வண்டியொன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சவுக்கடி பகுதியில் இருந்து படகு மூலம் வேறு ஒரு படகுக்கு ஆக்களை அனுப்பிக்கொண்டிருக்கும் போதே குறித்த செயற்பாடுகள் மீனவர்களினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் இருந்து 15இற்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முற்பட்டுள்ளதோடு, தப்பிச்சென்றுள்ள ஏனையவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.