மூளைச் சலவை செய்யப்பட்ட சிலர் இலங்கைக்கு துரோகம் செய்து விட்டனர்

Report Print Navoj in சமூகம்

வெளிநாட்டு பணத்திற்காக ஆசைப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டு சிலர் நாட்டுக்கு அநியாயமான துரோகத்தினை செய்து விட்டதாக இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி, மஜ்மா நகரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் 50 வீட்டுத் திட்டத்திற்கான குடிநீர் வழங்கும் நிகழ்வும், 60 பயனாளிகளுக்கு மின்சார இணைப்பிற்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றுள்ளது.

அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும், அவருடைய குரலை இந்த நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்ற பாரிய அணியினர் சிங்கள பெரும்பான்மை சமூகத்திற்குள் கங்கணம் கட்டி கொண்டு இருக்கின்றார்கள்.

அமைச்சர் றிசாட் பதியூதீனை இல்லாமல் செய்து அழித்து ஒழித்து விட வேண்டும் என்றும், இவர் இருப்பதால் முஸ்லிம்களின் குரலாக அதிகம் பேசுகின்றார், சண்டை பிடிக்கின்றார் என்று சிங்கள பேரினவாதிகள் அச்சப்படுகின்றனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியூதீனை இல்லாமல் செய்ய வேண்டும் அல்லது அவரை கைது செய்ய வேண்டும் என்று சத்தம் போடுகின்றார்கள். சும்மா ஒருவரை கைது செய்ய முடியுமா? ஏதாவதொரு பிழை செய்தால் மாத்திரம் கைது செய்ய முடியும்.

எந்த பிழையும் செய்யாமல் இருக்கும் அமைச்சர் றிசாட் பதியூதீனை கைது செய்ய வேண்டும் என சில ஊடகவியலாளர் மற்றும் அரசியல்வாதிகள் அழுது புலம்பி கொண்டிருக்கின்றார்கள். றிசாட் பதியூதீனை கைது செய் என்றால் சட்டம் சும்மா கைது செய்ய முடியுமா, முடியவே முடியாது.

இலங்கையில் என்ன நடந்தாலும் அதில் அமைச்சர் றிசாட் பதியூதீனை மாட்டிக் கொடுக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. வில்பத்து பிரச்சினை, மின்சார பிரச்சினை, காணி பிரச்சினை, குண்டு வெடிச்சாலும் சரிதான் என்ன நடந்தாலும் அதனுள் புகுத்தி அமைச்சர் றிசாட் பதியூதீனை கைது செய் என்று சொன்னால் எப்படி செய்ய முடியும் என்று கேட்கின்றேன்.

நாம் எவரும் எதிர்பார்த்து இருக்கவில்லை. முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து தற்கொலை குண்டுதாரி வருவார் என்று. அதுவும் ஏழு பேர் தற்கொலை குண்டுதாரியாக வருவார்கள் என்று நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

ஒரு அநியாயமாக சமூகத்தினை அடையாளப்படுத்தி இந்த நாட்டில் வேலைத் திட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. இந்த நாட்டில் இவ்வாறு செய்தார்கள் என்பதற்காக தான் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசினை வழங்க நடவடிக்கை எடுக்கின்றேன்.

இந்த நாட்டிலே பாதுகாப்புக்கு முஸ்லிம்களாகிய நாம் விசுவாசிகளாக இருக்கின்றோம். நாங்கள் சவூதியில் வாழ்க்கின்றோம் என்று சிலர் நினைத்து கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம்களிடத்தில் சிலர் வெளிநாட்டு பணத்திற்காக ஆசைப்பட்டு, மூளைச் செலவு செய்யப்பட்டு அவர்கள் மூலமாக இந்த நாட்டுக்கு அநியாயமான துரோகத்தினை செய்து விட்டனர்.

அதனை சரி செய்வது என்றால் பல வருடங்கள் செல்லும். ஏன் பாண் வெட்டும் கத்தியில் கூட பிழையாக காட்டும் நிலைமைக்கு வந்துள்ளது. எங்களது கெட்ட நேரம் சில பள்ளிவாசல்களில் இருந்து கத்திகள் பிடிபட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.