காதலனால் எரித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடற்பாகங்கள் மீட்பு

Report Print Satha in சமூகம்

பொலன்னறுவை - லக்ஷயஉயன பிரதேசத்தில் அமைந்துள்ள வயல் பகுதியொன்றில் இருந்து நேற்று மாலை எரிந்த நிலையிலான உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த உடற்பாகங்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் புலஸ்திபுர பகுதியில் காணாமல் போயிருந்த யுவதியுடையது என கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

புலஸ்திபுர பீ.ஓ.பீ பகுதியை சேர்ந்த 23 வயதான குறித்த யுவதி கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை புலஸ்திபுர பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரால் பொலன்னறுவை, சேவாகம பகுதியை சேர்ந்த அவரது காதலன் என கூறப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் யுவதி பணிபுரிந்த பொலன்னறுவை பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்தவர் எனவும், அவர் முன்னதாகவே திருமணமானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் இடையே காதல் உறவு ஆரம்பித்துள்ளதோடு குறித்த பெண் காணாமல் போவதற்கு ஒருசில வாரங்களுக்கு முன்னரே தனது காதலன் திருமணமானவர் என அறிந்துக் கொண்டுள்ளதாக மேற்படி விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் இருவருக்கும் இடையில் பல முறை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதோடு இம்முறுகல் நிலை அதிகரித்ததால் தான் இந்த கொலையை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ள காதலன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.