நகைகளை திருடி விற்பனை செய்த கணவருக்கு விளக்கமறியல்! மனைவிக்கு பிணை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை -உவர்மலை பகுதியில் நகைகளை திருடி விற்பனை செய்த கணவரை 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவரது மனைவியை பிணையில் விடுவிக்குமாறும் திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு முன்னிலையில் சந்தேகநபர்களை இன்றைய தினம் முன்னிலைப்படுத்தியபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை-உவர்மலைப்பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து கணவரும் மனைவியும் நகைகளை திருடியதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கணவரையும் மனைவியையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது திருடிய நகைகள் நகை கடை ஒன்றில் கொடுத்து உருக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை நகை திருடியமை தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இரண்டு முறைப்பாடுகள் இருப்பதாகவும் இரண்டு முறைப்பாடுகள் தொடர்பிலும் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் கணவரை விளக்கமறியலில் வைக்குமாறும் மனைவிக்கு 6 மாத கைக்குழந்தை இருப்பதால் கருணை அடிப்படையில் விடுவிக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார்.

இதனையடுத்து எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்துக்கு மனைவி ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் 26 வயது உடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers