போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும்: மன்னாரில் சிவாஜிலிங்கம்

Report Print Ashik in சமூகம்

போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சரியான பதில் கூறப்பட வேண்டும். சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு இன்று மதியம் 2 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு மன்னார் அரச பேருந்து நிலையத்தில் இடம் பெற்றது.

இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மேகன்ராஜ், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது உரையாற்றுகையிலேயே முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு கொலை நினைவு தினம் வாரம் நேற்று 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மதியம் மன்னாரில் 2 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு மன்னார் அரச பேருந்து நிலைய வளாகத்தில் இடம் பெற்றது.

தமிழ் மக்களின் கிராமங்கள், தனியார் காணிகளில் இருந்தும் ஆயுதப்படையினர் வெளியேற வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் பிரதான கோரிக்கையாக இலங்கை அரசு நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் எந்த விதமான விசாரணைகளும் நடத்தாத காரணத்தினால் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பாதுகாப்புச் சபையூடாக இலங்கை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இந்த தமிழின படுகொலை வாரத்தினை மே 12 ஆம் திகதி (நேற்று ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்தோம்.

5 ஆவது இடமாக இன்று மன்னாரில் இடம் பெறுகின்றது. 6 நாட்களில் 8 மாவட்டங்களில் 21 இடங்களில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெறவுள்ளது.

இறுதி நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம் பெறும். மேலும் மன்னார் உயிலங்குளத்தில் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்காகவும் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தமிழின படுகொலைக்கான அஞ்சலி நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers