இஸ்லாமிய மதம் பணமாக மாறியதால் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது!

Report Print Navoj in சமூகம்

இஸ்லாமிய மதம் பணமாக மாறியதன் காரணமாகவே குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீனவர்களுக்கு கொடுவா மீன் வளர்ப்புத் திட்டத்திற்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், “இஸ்லாமிய மதம் பணமாக மாறியுள்ளது. இதன் காரணமாகத்தான் குண்டுத் தாக்குதல் நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகங்கள் இரவில் தூங்க முடியுமா? பள்ளிவாயலுக்கு போக முடியுமா? அபாயாவை அணியலாமா? என்ற சந்தேகம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு சிலருக்கு என்ன நடக்கின்றது என்று தெரியாது. ஒரு சிலர் இதனை மெரூகூட்டி பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதில் யாரும் சிரிக்க வேண்டியது கிடையாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் விழிப்பாக இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் விழிப்பு செய்ய தவறியதன் காரணமாக உங்கள் மீதும், எங்கள் மீதும் ஏன் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் மீதும் குற்றம் சுமத்துகின்றார்கள்.

குண்டுத் தாக்குதல் காரணமாக எங்களை நம்பியிருந்த சிங்களம் மற்றும் தமிழ் மக்கள் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற அளவுக்கு இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லப்படுகின்ற ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம் உள்ளது.

இந்த பயங்கரவாதம் வெளிநாட்டில் கூலிக்கு மாறடிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாதமாகும்.

இந்த நாட்டிற்குள் கொண்டு வந்து பணத்திற்காக, கூலிக்காக மாறடித்து இருக்கின்றார்கள். ஒரு விடயமும் அறியாத அப்பாவி மக்களை கொன்று குவித்து இருக்கின்றார்கள்.

இந்த நாட்டில் கிறிஸ்தவ சமூகம் அனைவரோடும் ஒற்றுமையாக இருக்கின்ற சமூகம். இதனை நாங்கள் கடந்த காலங்களில் இருந்து கண்டு வருகின்றோம்.

எனவே இவ்வாறு நடந்து முடிந்த மனித படுகொலைக்கு யார் துணை போனார்கள் என்று நீங்கள் கண்டுள்ளீர்கள். எமது பிரதேசத்தில் யாராவது சந்தேகத்திற்கு இடமாக இருந்தால், ஏன் உங்களுடைய சொந்த பிள்ளைகளாக இருந்தாலும் காட்டிக் கொடுப்பதில் பின் நிற்காதீர்கள் என வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட நன்னீர் மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர் எஸ்.ரவிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் என பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers