வவுணதீவு படுகொலை சம்பவம்! விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியை நீதிமன்றில் ஆஜராக பணிப்பு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விடுதலைசெய்யப்பட்டவரை நாளை நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவந்தனர்.

இந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரதான தாக்குதல்தாரியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த சஹரானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுணதீவில் பொலிஸாரை கொலைசெய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் அஜந்தனை விடுதலைசெய்யுமாறு அமைச்சர் மனோகணேசன் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை அமைவாக ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய சனிக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வீ.தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்த பதில் நீதிவான் இன்றையதினம் திறந்த நீதிமன்றில் சமூகமளித்து விடுவிப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் பணித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றுக்கு அஜந்தன் ஆஜராகியிருந்த நிலையில் இன்றைய தினமும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிபதி கடமையில் இருந்ததன் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளதாக அஜந்தன் தெரிவித்தார்.