வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பலர் கைது! பொலிஸார் வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in சமூகம்

இன்று இரவு 7 மணியுடன் முடிவடைந்த 72 மணி நேரத்தில் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவாண் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், மினுவாங்கொடை பகுதியில் பள்ளிவாசல் மற்றும் கடைகளை கொளுத்தி சேதப்படுத்தியமை தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “கைது செய்யப்பட்ட 64 பேரில் 9 பேர் நேரடியாக வன்முறைகளில் பங்கேற்ற முக்கியமான நபர்களாவர். அந்த 9 பேரும் ஹெட்டிபொலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து, குறித்த அனைவரும் எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குளியாபிட்டிய வன்முறைகளுடன் தொடர்புடைய 10 பேர் கைதுசெய்யப்பட்டு குளியாபிட்டிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் 18 பேர் கைதுசெய்யப்பட்டு மாரவில நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்கள் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொடூர தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளைக் கையாளும் பொலிஸ் தலைமையகத்தின் சிறப்பு பொலிஸ் குழு அது தொடர்பில் பல தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

வன்முறைகளில் பங்கேற்றவர்களை பிடிக்க, பதில் பொலிஸ் மா அதிபர் அமைத்துள்ள வெவ்வேறு சிறப்பு விசாரணை அதிகாரிகளின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers