குண்டர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்ட இடங்களுக்கு அரசியல் பிரமுகர்கள் விஜயம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வட மேல் மாகாணத்தில் கலவரங்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்த விஜயத்தில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மக்களின் தற்போதைய நிலவரங்களை அவர்கள் கேட்டறிந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் அந்த குழுவினருடன் உரையாடிய போது, வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்களால் பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள், வீடுகள் உள்ளிட்ட பல சொத்துக்கள் சேதமாகியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நோன்பு மாத காலத்தில் இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டதால் தாம் நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ வேண்டியுள்ளதாகவும், தமது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்ட நிலையில் அவற்றை இழந்து நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் பள்ளிவாசல்களின் உடமைகளும், அல் குர்ஆனும் தீக்கிரையாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் நிர்வாக சபையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவங்களில் மெடிகே அனுகன மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாயல், பிங்கிரிய கிண்ணியம ஜூம்ஆ பள்ளிவாயல், ஹெட்டிபொல - கொட்டம்பிட்டி மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல், மஸ்ஜிதுல் அல்அம்மர், அல் ஜமாலியா மத்ரஸா, நிக்கப் பிடிய தாருஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயல் போன்ற மதஸ் தலங்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் கலவரம் ஏற்பட்ட போது தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த கொட்டரமுல்ல பகுதியில் உள்ள பௌசுல் அமீர்டீன் என்பவரின் உடலுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், அன்னாரின் குடும்பத்திற்கு அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers