கடிதம் மீட்கப்பட்டதை தொடர்ந்து 12 வயது சிறுவனின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் - பேசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுவனின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பேசாலை 7ஆம் வட்டாரம் யூட் வீதியில் வசித்து வந்த பிறின்ஸ்டன் ரயனா என்ற சிறுவனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையின் பின் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுவனால் எழுதி வைக்கப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்று பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது கிடைத்துள்ளது.

குறித்த கடிதம் கடந்த 08.05.2019 அன்று திகதி இடப்பட்டு எழுதப்பட்டுள்ளதோடு, தனக்கும் தனது தந்தைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், தான் கேட்பவை எவற்றையும் அவர் வாங்கி தருவது இல்லை எனவும், தந்தை 2ஆம் திருமணம் முடித்தது தனக்கு பிடிக்கவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா சென்றால் அங்கே தன்னை நன்றாக கவனிப்பார்கள் எனவும், தான் இந்தியா செல்வதாகவும் உயிரிழந்த சிறுவனால் எழுதப்பட்டதாக கருதப்படும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுவனின் தாயார் இறந்த நிலையில் அவனுடைய தந்தை மறுமணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த சிறுவனின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers