எமது மக்களின் பாதுகாப்பைக் கோருவதில் என்ன தவறு இருக்கிறது? காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

எமது பகுதிகளின் மக்களின் பாதுகாப்பை கோர வேண்டியது எனது தார்மீகக் கடமையும் பொறுப்புமாகும் என காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.

எமது கிராமத்தின் ஆலயத் தலைவர்கள், அதிபர்கள், பொதுநல அமைப்புகளின் தலைவர்கள் அண்மையில் கூடிய பொதுக்கூட்டத்தில் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க எமது பகுதி மக்களின் பாதுகாப்பு கோரியதில் என்ன தவறு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காரைதீவு பிரதேச சபையின் நூலகக்கேட்போர் கூடத்தில் நேற்று ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான த.மோகனதாஸ், சி.ஜெயராணி ஆகியோரும் கலந்து கருத்துரைத்தனர்.

அண்மையில் நடைபெற்ற ஒரு ஊடக மாநாட்டில் தவிசாளர் தெரிவித்த அறிக்கைக்கு, உபதவிசாளர் விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் இவ்வூடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் கூறுகையில்,

முஸ்லிம்களின் பெயரை வைத்துக் கொண்ட ஒரு பயங்கரவாதக் குழுவினர் செய்த மிலேச்சத்தனமான கொடுரச்செயலுக்கு அனைத்து முஸ்லிம் மக்களையும் குற்றம் சாட்ட முடியாது.

யாரும் அப்படிக் குற்றம் சுமத்தவும் இல்லை. நானும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் என்று சொல்லவுமில்லை.

அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத் தொடரில் 300இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் இதுவரை எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் யாருக்கும் தீங்கிழைக்கவில்லையென்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இனவாதம் மதவாதம் பேசி நிம்மதியாக வாழ்ந்த சரித்திரம் உண்டா?

அரசியலுக்காக உபதவிசாளர் அடிமட்டமான தனிப்பட்ட கருத்துக்களை எனக்கெதிராகத் தெரிவித்துள்ளமை அவரொரு அடிமட்ட முட்டாள் என்பதை நிருபிக்கிறது.

ஒருவரது எதிர்ப்பறிக்கை என்பது நாகரீகமாக கருத்துக்கு மறுதலித்து மறுகருத்து சொல்லப்படவேண்டுமே தவிர தனிப்பட்ட ரீதியில் யாரும் யாரையும் தாக்குவதென்பது அவரவர் பண்பு தகுதி தராதரங்களை வெளிக்காட்டும்.

அரசியலுக்காக ஒற்றுமையாக வாழும் தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரித்து இலாபமடைய முயற்சிக்கும் ஒரு சதியாகவே இதனைப் பார்க்கிறேன்.

எனவே இவர் அரசியலுக்காகப் பேசும் இப்பொய்களுக்கு பின்னால் எனது இனிய இஸ்லாமிய சகோதரர்கள் துணைபோக மாட்டார்களென்பதை நான் நன்கு அறிவேன்.

காரைதீவு 3 ஊர்களின் மத்தியிலிருப்பதால் தான் பாதுகாப்பு என்று சொல்வதற்கு இவர் யார்? பயங்கரவாதிகளுக்கும் பேரினவாதக்கட்சியின் முகவரான இவருக்கும் தொடர்புள்ளதா? எனச் சந்தேகிக்கவேண்டியுள்ளது.

எனக்கு அவர் பல்வேறு வழிகளில் கடந்தக்காலங்களில் அச்சுறுத்தல் விடுத்து வந்திருக்கிறார். எனவே எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் இவரே பொறுப்பாளராவார் என்பதை இங்கு பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன்.

நான் அரிசி, பருப்பு கொடுத்து உறுப்பினராகவில்லை. வேலை பெற்றுத் தருகிறேன் எனக் கூறி பல தமிழ் மக்களிடம் இலஞ்சம்பெற்று ஏமாற்று வேலைகளில் திரியவில்லை. அதற்கு சிலர் துணை போகின்றனர்.

ஆளுநரின் ஷரியா பல்கலைக்கழகம் தொடர்பில் முழு நாடே பேசுகிறது. ஏன் எம்மால் பேசமுடியாது? இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

உறுப்பினர் சி.ஜெயராணி உரையாற்றுகையில்,

எமது மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட தவிசாளருக்கெதிராக அவதூறான வார்த்தைகளை உள்ளடக்கி கேவலமான அறிக்கை வெளியிட்ட உபதவிசாளரைக் கண்டிக்கிறேன்.

எமதூர் பாதுகாப்பை எமது தவிசாளர் கேட்காமல் வேறு யார் கேட்பது?

அதனைக் கேள்விக்குட்படுத்த உபதவிசாளர் யார்?

சபையிலும் அவர் இதுவரை காலமும் அனைத்திற்கும் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளார். எதனையும் இனவாத நோக்கில் பாக்கும் மோசமான பேர்வழியாகவுள்ளார். பெண்களை மதிப்பதில்லை. அவதூறான வார்த்தைகளை சபையிலே பேசுவார்.

எமது சபையில் இரு இனங்களும் உள்ளன. எம்முடன் உள்ள 5 முஸ்லிம் சகோதரர்களோடு நாம் சகோதரமாக பாசத்தோடு பழகிவருகிறோம். இவரைத் தவிர ஏனையோர் நன்றாக சகோதரமாகப் பழகுகின்றனர். இனியாவது அவர் இனவாதத்தை கைவிட்டு ஒற்றுமையாக வாழவேண்டும் என்றார்.

உறுப்பினர் த.மோகனதாஸ் உரையாற்றுகையில்,

காரைதீவில் மக்கள்வாக்குகளைப் பெற்று நேரடியாகத் தெரிவானவர்கள் நாங்கள். நாம் பேரினவாதக் கட்சியின் முகவராக வரவில்லை. த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களாகத் தெரிவானவர்கள்.

எமது தவிசாளருக்கெதிராக மிகவும் கேவலமாக அறிக்கையை வெளியிட இவர் யார்? இவருக்கு என்ன அருகதையுள்ளது? இவர் எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்?

எமதூர் பிரச்சினையை நாம் கையாளாமல் அவரா கையாள்வது? இனிமேலாவது தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதைவிடுத்து நேர்மையான அரசியல்வாதியாக இருக்கப் பழக வேண்டும். அரசியலுக்காக மக்களைப் பிரிக்க தலைப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers