சிறுபான்மை முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு இலங்கை தவறியுள்ளது! சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு

Report Print Kamel Kamel in சமூகம்

நாட்டின் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், கடைகள், அலுவலகங்கள் வீடுகள் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல்வகைத்தன்மையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கான முனைப்புக்களில் இலங்கை அரசாங்க அதிகாரிகள் ஈடுபட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய ஆய்வாளர் தியாகி ருவன்பத்திரன தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையிலான குரோத உணர்வுகளை களைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

மீளவும் வன்முறைகள் ஏற்படுவதனை தடுக்கவும், மனித உரிமைகளை பேணிப் பாதுகாக்கவும் அதிகாரிகள் கூடுதல் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

2018 மார்ச் மாதம் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய தரப்பினர் மீளவும் இந்த தாக்குதல்களுடன் தொடர்புப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் இது குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தால் இந்த தாக்குதல்களை அதிகாரிகளினால் தடுத்திருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers