ஏறாவூரில் கார் மீது பெற்றோல் குண்டுதாக்குதல்

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் புகையிரத நிலைய வீதியை அண்டியுள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதோடு, இது குறித்து காரின் உரிமையாளர் 38 வயதுடைய ஏ.எஸ்.எம்.நௌஷாத் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவத்தினால் கார் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், வீட்டிற்கும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

மூவரடங்கிய குழுவொன்றே தனது வீட்டிற்குள் புகுந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த மாதமிருந்தே கைத்தொலைபேசியில் தனக்கு எச்சரிக்கைக் குறுஞ்செய்திகள் வருவதாகவும், 25ஆம் திகதி இந்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததாகவும் காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.10 மணிக்கு மனைவியைக் கொல்லப்போவதாக அச்சுறுத்தல் குறுஞ்செய்தி கைத்தொலைபேசியில் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஏற்கெனவே தனது கார் இயங்க முடியாத வகையில் அடையாளந்தெரியாதோர் காரின் என்ஜின் பகுதியை சேதமாக்கியிருந்தமை கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக தகவல் - ருசாத்

Latest Offers